0.01 வினாடி வித்தியாசத்தில் உலக சாதனைப் படைத்த ஆஸி. நீச்சல் வீராங்கனை

ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ் நீச்சல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதன் 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ஆஸ்திரேலியா வீராங்கனை கேத் கேம்ப்பெல் பந்தய தூரத்தை 52.06 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் உலக சாதனைப்படைத்துள்ளார்.

இதற்கு முன் 2009-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற பினா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை பிரிட்டா ஸ்டீபன் பந்தய தூரத்தை 52.07 வினாடிகளில் கடந்தார். இதுதான் இதுவரை உலக சாதனையாக இருந்தது. தற்போது கேம்ப்பெல் 52.06 வினாடிகளில் கடந்து 7 வருட சாதனையை முறியடித்துள்ளார். இருவர்களுக்கிடையில் இருக்கும் வித்தியாசதம் 0.01 வினாடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேம்ப்பெல் பந்தயத்தை தொடங்கி முதல் பாதியை 24.89 வினாடிகளிலும், 2-வது பாதி தூரத்தை 27.17 வினாடிகளிலும் கடந்தார். பிரிட்டா ஸ்டீபன் முதல் பாதி தூரத்தை 25.46 வினாடிகளிலும், 2-வது பாதி நேரத்தை 26.51 வினாடிகளிலும் கடந்தார்.

ஏற்கனவே கேம்ப்பெல் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 52.38 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முத்திரை பதித்திருந்தார்.