இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலை சுமார் 6.40 மணியளவில் சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி மின்சார ரெயிலுக்கு காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபரால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழும்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு 27.6.2016 அன்று சென்னைப் பெருநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, காவல் துறையினரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக துரித புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புலன் விசாரணையில் சூளைமேடு சௌராஷ்டிரா நகரில் உள்ள ஏ.எஸ். மேன்சனில் விசாரணை மேற்கொண்ட போது, கண்காணிப்பு கேமிரா பதிவு மற்றும் மேன்சனில் பராமரிக்கப்பட்டுள்ள பதிவேடுகளின் அடிப்படையிலும் சந்தேகிக்கப்படும் நபர் அந்த மேன்சனில் தங்கியிருந்ததும், சுவாதி கொலை சம்பவத்திற்கு பிறகு அந்த நபர் தலைமறைவாகியிருந்ததும் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட நபர் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகிலுள்ள டி.மீனாட்சிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்ததால், புலன் விசாரணை செய்த தனிப் படையினர், 1.7.2016 அன்று இரவு திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு ராம்குமாரின் இருப்பிட முகவரியை விசாரிக்க தனிப்படை ஒன்றினை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். திருநெல்வேலி காவல் துறையினர் ராம்குமார் வீட்டினை சோதனையிட முற்பட்ட போது, ராம்குமார் தனக்குத் தானே காயம் ஏற்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த செல்வி சுவாதியை ராம்குமார் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லாத நிலையில், தொழில்நுட்ப உதவியுடனும், அறிவியல் ரீதியான புலன் விசாரணை மூலமும் நடவடிக்கை எடுத்து குற்றவாளி விரைந்து கைது செய்யப்பட்டமைக்கு பெருநகர சென்னை காவல் துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (2.7.2016) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காவல் துறையினருக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.
குற்றங்களை விரைந்து கண்டுபிடிப்பதிலும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் எப்போதும் முன்னோடியாக விளங்கும் தமிழக காவல் துறை, காவல் துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த கொலை வழக்கை விரைந்து புலனாய்வு செய்து, குற்றவாளியை கைது செய்ததன் மூலம் சிறப்பு வாய்ந்த முதன்மை காவல் துறை என்பதை மீண்டும் நிருபித்துள்ளதற்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.