இந்தியா உடனான உறவில் எல்லைப் பிரச்சனை பெரிய சவாலாக உள்ளது: சீனா

இந்தியா, சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன.

201606271523315896_Border-dispute-a-major-challenge-for-Sino-India-ties-China_SECVPF

இந்நிலையில், இந்தியா உடனான உறவில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை துணை மந்திரி லி ஹூய்லாய் கூறுகையில், “அண்டை நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையே உறவில் எல்லைப் பிரச்சனை போன்று வரலாற்று ரீதியான சர்ச்சைகள் இருந்திருக்கிறது. இந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது பெரிய சவாலாக இருக்கிறது. இந்தியா – சீனா உறவில் புதிய சர்ச்சைகளும் உருவாகி உள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும், “தொடர்புகளையும், பேச்சுவார்த்தைகளையும் வலிமைப்படுத்த இருநாட்டு தரப்பிலும் ஒப்புக் கொண்டிருக்கிறோம். நட்பு ரீதியான ஆலோசனைகளின் படி நியாயமான மற்றும் பரஸ்பரமான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எட்ட வேண்டும். பிரச்சனை கட்டுக்குள் இருப்பதால் தான் இருநாடுகளிடையேயான உறவில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உள்ளது” என்றார்.

இருப்பினும் இருநாடுகளிடையேயான புதிய சர்ச்சைகள் குறித்து சீன மந்திரி எதுவும் குறிப்பாக தெரிவிக்கவில்லை.