நமது நாட்டில் போசாக்கு இன்மையால் 18 வீதமானவர்கள் இருக்கின்றார்கள் – ஜனாதிபதி

க.கிஷாந்தன்

நுவரெலியா மாவட்டம் மது பாவனையின் மூலம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

நாட்டு மக்களின் எதிர் காலம் நலன் கருதி ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

அந்தவகையில் 26.06.2016 அன்று காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டமொன்று நடைபெற்றது.

 

இதில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் இங்கு கூறுகையில்,

 

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றார்கள். அந்தவகையில் உங்களின் வாழ்க்கை பற்றி நீங்கள் சிந்திக்கின்றீர்களா ? அல்லது சிந்திக்க முயற்சி செய்கின்றீர்களா ? இந்த நாட்டில் போசாக்கு இன்மையால் 18 வீதமானவர்கள் இருக்கின்றார்கள். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலே அதிகமானவர்கள் போசாக்கு இன்மையால் வாழ்கின்றார்கள். இங்கு வாழ்கின்ற மக்களிடம் நான் கேட்கின்றேன் இது ஒரு கௌரவமான விடயமா என்று. நான் சர்வதேச மாநாட்டிற்கு சென்று நமது நாட்டில் 18 வீதமானவர்கள் போசாக்கு இன்மையால் வாழ்க்கின்றார்கள் என கூறும் பொழுது நான் வெட்கப்பட்டேன்.

 

அதிகமாக போசாக்கு இன்மையினால் வாழும் இந்த நுவரெலியா மாவட்டத்தில் இப்பிரச்சினையை முதலில் விரட்டியடிக்க வேண்டும். அதற்கு நாம் அணைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும். தோட்டப்புற மக்கள் பொருளாதார வசதியின்மையால் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இது ஒரு இரகசியம் அல்ல. தோட்டப்புற மற்றும் ஏனைய மக்களுடைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப நாம் அணைவரும் அரப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இந்த பொருளாதார பிரச்சினையை கட்டியெழுப்புவதற்கு எமக்கு இருக்கின்ற சவால்கள் தான் என்ன ? ஏழை, வறுமை அதிகரிக்க காரணம் என்ன ? அதில் முக்கியமான விடயம் தான் இந்த மாவட்டத்தில் இருக்க கூடிய போதைபொருள் பாவனை பிரச்சினையாகும்.

 

இந்த பிரச்சினையை முதலாவதாக நுவரெலியாயில் இல்லாதொழிக்க வேண்டும். இந்த நாட்டில் சட்டபூர்வமாக அனுமதி பெற்று மதுவை விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிகமான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் மாவட்டங்களை முதலாம், இரண்டாம், மூன்றாம் என வரிசைப்படுத்தி எனக்கு கூற முடியும். அந்தவகையில் முதலாம் இடத்தில் யாழ்ப்பாணமும், இரண்டாம் இடத்தில் நுவரெலியா மாவட்டமும், மூன்றாம் இடத்தில் மட்டகளப்பு மாவட்டமும் காணப்படுகின்றது.

 

நுவரெலியா மாவட்டத்தில் வருடத்திற்கு 1600 கோடி ரூபா இங்குள்ள மக்கள் மதுவுக்காகவும், புகைத்தலுக்காவும் செலவு செய்கின்றார்கள்.

 

எனவே இந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுப்படுவதற்கு சிந்திக்க வேண்டியதோடு அணைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட்டு இவ்விடத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.