ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டுமா – வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்காக அந்நாட்டு மக்களிடம் வரும் 23-ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, இங்கிலாந்தில் ஆளும் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்று குரல் கொடுத்துவந்த தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி. ஜோ காக்ஸ் (வயது 41) தலைநகர் லண்டனில் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
தனது தொகுதியான மேற்கு யார்க்ஷைரில் உள்ள பிரிஸ்டால் நகரில் ஜோ காக்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இருநபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டையை ஜோ காக்ஸ் விலக்க முயன்றதாகத் தெரிகிறது.
அப்போது மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டுள்ளார். பின்னர், தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு அவர் தப்பியோடினார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் உயிரிழந்தார்
ஒரு பெண் எம்.பி. கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவுகிறது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு பிரச்சாரம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் விற்பனையில் முதலிடத்தில் உள்ள பிரபல பத்திரிகைகளான தி சன், சன்டே டைம்ஸ் போன்றவை ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில், அந்நாட்டின் பிரபல நாளேடான ‘தி டெலகிராப்’ நேற்று வெளியிட்டிருந்த கட்டுரையில், வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இங்கிலாந்தின் மிகப் பழமையான ‘தி டெலகிராப்’ நாளிதழ் தினந்தோறும் ஐந்து லட்சம் பிரதிகள் அளவுக்கு விற்பனையாகும் பிரதான பத்திரிகையாகும்.
அதன்வரிசையில், தினந்தோறும் பதினைந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகும் மற்றொரு பிரதான நாளிதழான ‘டெய்லி மெயில்’ இன்று தீட்டியுள்ள முதல்பக்க தலையங்கத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
‘பிரிட்டைனின்மீது நம்பிக்கை உள்ளவர்கள் பொய்கள் மற்றும் பேராசைக்கார மேல்வர்க்கத்தினரின் பிடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய யூனியனில் இருந்து விடுபட நாம் வாக்களிக்க வேண்டும்’ என தலையங்கம் குறிப்பிடுகிறது. இதே குழுமத்தை சேர்ந்த மற்றொரு வார இதழான ‘மெயில்’ பத்திரிகை ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்க வாக்களியுங்கள் என கடந்த வாரம் பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.