துபாயில் சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி: முதல் பரிசு ரூ.50 லட்சம்

201606211321309228_Rs-50-lakh-first-prize-for-Dubai-international-Koran_SECVPF.gif

துபாயில் இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்றுவரும் போட்டியில் பங்கேற்றவர்களில் 81 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிப் பெற்று, இதுவரை 41 பங்கேற்பாளர்களின் போட்டி அமர்வுகள் முடிவடைந்துள்ளன.

இதனிடையே அரபு மொழியின் எழுத்தணிக் கண்காட்சியும் அதே இடத்தில் நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய கையெழுத்து பிரியர்களுக்கும் இந்தக் கண்காட்சி ஒரு பெரும் தீனியாக அமைந்தது.

கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா,  கடந்த வியாழன் இரவு அரபி மொழி எழுத்தணிக் கண்காட்சியைகாலித் அல் ஜலாஃப், எமிரெட்ஸ் அரபு கேலிகிராஃபி சமூகத்தின் தலைவரின் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சி துபாய் கலை மற்றும் கலாச்சார ஆணையத்துடன் கூட்டாக நடைபெறுகிறது. கண்கவரும் பலவகையான கையெழுத்துகள் அடங்கிய இந்தக் கண்காட்சியில் ‘திவானி’ மற்றும் ‘துலுத்’ கையெழுத்துப்படிவம் வகைகளையும் கொண்டது.

சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார மன்றத்தின் ‘படைப்பாற்றல் விருது’ பெற்றவரும், குவைத் மற்றும் தாய்லாந்து அனைத்துலக கையெழுத்துக் கண்காட்சிகளில் கவுரவிக்கப்பட்ட புகழ்பெற்ற அமீரகத்துக் கையெழுத்தாளரான கலைஞர் ஃபாத்மா சலீம் இதில் கலந்து கொண்டார்.

குர்ஆன் மனனப்போட்டி மற்றும் எழுத்தணிப் போட்டிகள் உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களை நெருக்கமாக்குவதற்கும் ஒருவருக்கொருவரின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது என்று வந்திருந்த விருந்தினர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.

திருக்குர்ஆன் மனனப் போட்டியில் 25 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த வருடப் போட்டியில் பத்து வயதே நிரம்பிய நேபாளைச் சேர்ந்த ஷேக் முஹம்மது வசீர் அக்தர்தான் மிகவும் இளையவர். கிட்டதட்ட 25 வயதைத் தொடும் நெதர்லாந்தைச் சேர்ந்த பிலால் எல் இமானிதான் இப்போட்டியிலேயே வயதில் மூத்தவர்.

இப்போட்டில் இரண்டு பார்வையற்றவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஒருவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஹம்மது தாஹா மஹ்பூப் வரிக்கோட்டில் மற்றும் பனாமா நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் சலீம் பட்டேல்.

திருக்குர்ஆன் மனனப்போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு இரண்டரை லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 50 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஸிலா பானு, துபாய்