பதான்கோட் விமானதளம் அருகே தீவிரவாதிகள் பதுங்கல்: பாராளுமன்ற நிலைக்குழு தகவல்

201606211744391085_Terrorists-hiding-near-Pathankot-airbase_SECVPF.gif

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இது நாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு வழிவகுத்ததையடுத்து, இதுபற்றி உள்துறை அமைச்சகத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு பதான்கோட் தளத்தை ஆய்வு செய்தது. இந்த குழு அளித்த அறிக்கையில், பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழு சென்றுள்ளது. 

அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிலைக்குழு தலைவர் பட்டாச்சார்யா, “பதான்கோட் தளத்தில் ஆய்வு செய்து திரும்பியதும், அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை அரசுக்கு தெரிவித்தோம். பதான்கோட் தளத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதையும், எங்களின் ஆலோசனைகளையும் கூறினோம். 

பதான்கோட் அருகில் உள்ள கிராமங்களில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொதுமக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதுபற்றி அரசாங்கத்திடம் தெரிவித்ததையடுத்து, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தை உஷார்படுத்திய அரசு, பதான்கோட் பாதுகாப்பு பணியை அவர்களிடம் ஒப்படைத்தது” என்றார்.