பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

201606211900269578_Mr-Modi-I-Am-Not-Rahul-Sonia-Gandhi-Or-Vadra-Arvind-Kejriwal_SECVPF.gif

 

டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலம் முழுவதும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதில், ரூ. 400 கோடி முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது சம்பந்தமாக உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்த போது, விதிமுறைகளை மீறி இந்த தவறுகளை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் அரவிந்த் கெஜ்ரிவால், ஷீலா தீட்சித் இருவரையும் குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர்.

இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளது தொடர்பாக ஆவேசம் அடைந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

“திரு. மோடி ஜி, என்னை பயமுறுத்துவதற்கு நான் ராகுலோ, சோனியாவோ இல்லை. என்னிடம் ரகசிய உடன்படிக்கை செய்துக்கொள்வதற்கு நான் ராபர்ட் வதேரா இல்லை. 

ராகுல், சோனியா அல்லது வதேரா மீது மோடி அரசு வழக்கு பதிவு செய்வது இல்லை. ஆனால் நான் குறிவைக்கப்படுகிறேன். மோடி அரசு சி.பி.ஐ. சோதனைகள், பொய் வழக்குகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றால் மக்களை மிரட்டுகிறது. ஆனால் நான் ஒரு பாறை போன்று நிற்கிறேன். நான் உடையவோ, பின்வாங்கவோ அல்லது வளைந்து கொடுக்கவோ மாட்டேன். 

எனக்கு எதிராக செயல்பட அனைத்து புலனாய்வுத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளீர்கள். சி.பி.ஐ. வைத்து சோதனை நடத்தினீர்கள் ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. தற்போது என் மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்.-ஐ வரவேற்கிறேன். என்னுடன் நேரடியாக மோதுவதை ஏற்றுக்கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.