இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தில் உள்ளவற்றை மூஸா (அலை) அவர்கள் மக்களுக்கு போதித்து வந்தார்கள்.
“வாருங்கள்! இறைவன் நம் மீது விலக்கியிருப்பவற்றை ஓதிக் காண்பிக்கிறேன்” என்று சொல்லி மூஸா (அலை) வாசிக்கிறார் – “எப்பொருளையும் அல்லாஹ்வுக்கு இணையாக வைக்காதீர்கள். பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.
ஏனெனில் அல்லாஹ்வே உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் உணவளிக்கின்றான். வெளிப்படையான, இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமில்லாமல் கொலை செய்யாதீர்கள்” இவற்றை மக்கள் உணர்ந்து கொள்வதற்காகவே இறைவன் அருளிய வேதத்திலிருந்து மூஸா (அலை) போதித்தார்கள்.
தனிமையில் இருக்கும் போது மூஸா (அலை), இறைவன் தந்த கற்பலகையில் உள்ள இறைவனின் வார்த்தைகளை ஓதுகிறார்கள். அது பற்றி இறைவனிடம் கேட்கிறார்கள் “யா அல்லாஹ்! ஓர் உம்மத் அதாவது ஒரு தலைமுறையினர் வருவார்கள், அவர்கள் கடைசியாகப் படைத்து அனுப்பப்படுவார்கள், ஆனால் முதலில் சொர்க்கம் புகுவார்கள் என்று படித்துப் பரவசமடைந்தேன். அது என்னுடைய மக்களாக இருக்கட்டுமே” என்று இறைவனிடம் கேட்கிறார்கள். அதற்கு அல்லாஹ் “இல்லை, அது முஹம்மதின் உம்மத்தினர்” என்று சொல்லிவிட்டான்.
மறுபடியும் மூஸா (அலை) “யா அல்லாஹ்! ஓர் உம்மத்தினர் உன்னுடைய இறை வசனங்களை மனனம் செய்து மனதிலிருந்து ஓதக்கூடியவர்களாக இருப்பார்கள். அதற்கு முன்னால் உள்ள அத்தனை சமூகத்தாரும் பார்த்து மட்டுமே ஓதக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன் “இல்லை, அது முஹம்மதின் உம்மத்தினருக்குத் தரப்பட்ட பாக்கியம்” என்று சொல்கிறான்.
இதுவும் தன் உம்மத்துக்கில்லையா என்று யோசித்தவர்களாக அடுத்த விஷயத்தைப் பற்றிக் கேட்கிறார்கள் மூஸா (அலை) “இறைவா! ஓர் உம்மத்தினர் கடந்து சென்ற வேதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், கடைசி வேதத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களாகவும் திகழ்ந்து, உலகத்தில் உள்ள கெட்ட சக்திகளுக்கு எதிராகப் போரிட்டு அழித்து, தஜ்ஜாலையும் எதிர்கொண்டு எதிர்த்துப் போராடுவார்கள் என்றுள்ளதே, என் சமுதாயத்தவர்களை அப்படி ஆக்குவாயாக அல்லாஹ்” என்று கேட்கிறார்கள். அதற்கும் இறைவன் “இல்லை மூஸாவே அதுவும் கடைசிக் காலத்தில் வரக்கூடிய முஹம்மதின் உம்மத் செய்யக் கூடியது” என்றான்.
இப்படியாக ஒவ்வொரு விஷயமாகக் கேட்டு அது முஹம்மதின் உம்மத்துக்கு என்று தெரிந்தவர்கள் இறுதியாக, “யா அல்லாஹ்! ஓர் உம்மத் வரும் அவர்கள் செய்யும் ஒரு நற்காரியத்திற்கு, பத்து நன்மைகளைத் தருவதாக இதில் குறிப்பிட்டுள்ளாயே!? அந்த பாக்கியத்தைப் பெறுபவர்கள் என் மக்களாக என் சமுதாயத்தவர்களாக இருக்கட்டுமே” என்று ஆவலுடன் கேட்கிறார்கள். அதையும் இறைவன் மறுத்து “இதுவும் முஹம்மதின் உம்மத்துக்குதான்” என்று சொன்னான்.
அதைக் கேட்ட மூஸா விரக்தியடைந்து தன் கையிலிருந்த பலகையை கீழே போட்டவர்களாக, மண்டியிட்டு “யா அல்லாஹ்! என்னையும் நீ முஹம்மதின் உம்மத்தாக்கிவிடு” என்று கேட்டார்கள்.
இந்நிகழ்வு ‘இப்னு கத்தாதா’ பதிவில் வந்துள்ளது.
இதன் மூலம் மூஸா (அலை) அவர்களுக்கே நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தாக வந்திருக்க வேண்டுமென்ற ஆவல் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினரும், பிறகு அவர்களைத் தொடர்ந்து வருபவர்களும், பிறகு அவர்களையும் அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தினர் வருவர், அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும், அவர்களின் சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்” என்று. (ஸஹிஹ் புகாரி 6429)
திருக்குர் ஆன் 6:151
ஜெஸிலா பானு