ஜெர்மனியில் உள்ள முனிச் நகரிலிருந்து ஏர் பெர்லின் என்ற விமானம் 170 பயணிகள் மற்றும் 7 விமான குழுவினருடன் நேற்று பிற்பகல் புறப்பட்டுள்ளது. ஹேம்பர்க் நகருக்கு அந்த விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில் ‘நடுவானில் பறந்துக்கொண்டு இருக்கும் ஏர் பெர்லின் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த தகவல் பறந்துகொண்டிருந்த விமானத்திற்கு தெரிவிக்கப்படவில்லை.
ஹேம்பர்க் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும் போலீசார் விரைந்து செயல்பட்டனர். இந்த நேரத்தில் விமானங்கள் புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. வரக்கூடிய விமானங்கள் தரையிறங்கவும் தடை செய்யப்பட்டது.
வெடிகுண்டு உள்ளதாக கூறப்பட்ட விமானத்தை தனியாக கொண்டு சென்று தொலைவில் நிறுத்தியுள்ளனர். பின்னர், ஒவ்வொரு பயணியையும் வெளியேற்றி அவர்களின் பெட்டிகளையும் சோதனை செய்துள்ளனர்.
விமானத்தின் ஒவ்வொரு அங்குலமாக தேடிய பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மின்னஞ்சல் அனுப்பியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.