மைத்திரி தரப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பசில் ராஜபக்ச

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்புக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பசில் ராஜபக்சவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதற்காக மைத்திரி தரப்பின் சார்பில் தலையீடுகளை மேற்கொண்டிருந்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பசில் ராஜபக்சவுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன.

இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியினை இயக்கும் அதிகாரத்தை தான் கைப்பற்றுவதற்காக பசில் ராஜபக்ச தற்போது புதிய திட்டங்களை வகுத்து வருகிறார். 

கூட்டு எதிர்க்கட்சியில் பசில் ராஜபக்சவுக்கு எதிரான அணியொன்று இருந்தாலும் புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக பிரதேச ரீதியில் கிளைகளை அமைப்பதற்காக குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த மே தினத்தில் மகிந்த ஆதரவு தரப்பினரை கொண்டு பசில் ராஜபக்ச கிருலப்பனையில் பாரிய கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்தார். 

இந்த கூட்டம் வெற்றியளித்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எண்ணத்தில் அவர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். 

எனினும் காலியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கிருலப்பனை கூட்டத்தை விட வெற்றிகரமாக நடைபெற்றது. 

அதேவேளை உடன்படிக்கை ஒன்றின் மூலம் இரண்டு வருடங்களுக்கு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த கூட்டு அரசாங்கத்தை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட தயாராகி வருகின்றனர்.

இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அனுரபிரிதர்ஷன யாப்பா, சரத் அமுனுகம, எஸ்.பி. திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர உள்ளிட்டோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரிப்பது தவிர பொருளாதாரம் சம்பந்தமான பொது வேலைத்திட்டத்தை வகுப்பது, 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாகவும் இந்த குழுக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. 

கூட்டு அரசாங்கத்திற்கு எதிராக ராஜபக்ச ஆதரவு தரப்பினரிடம் இருந்து வரும் சவால்களை கவனத்தில் கொள்ளாது, அரசாங்கத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வது இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.