சுலைமான் றாபி
நிந்தவூர் அமானா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினரால் நஞ்சற்ற உணவு உற்பத்தியும், போசனை சம்பந்தமானதுமான விழிப்புணர்வும், இப்தார் நிகழ்வும் இன்றையதினம் (11) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் சனசமூக நிலைய தலைவர் ஐ.பி. முஹைடீன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய உணவு உற்பத்திப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எம்.எம். அலியார், வைத்தியர் ஏ. லஹாக், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பி மௌலானா, விவசாய போதனாசிரியர்களான ஏ.டபிள்யு.எம். றம்சி, ஏ.எச்.ஏ. முபாறக் உள்ளிட்ட நிந்தவூரில் காணப்படும் 25 கிராம சேவக பிரிவுகளில் இயங்கும் சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூர் வரலாற்றில் பல்வேறு சமூகப் பணிகளையும், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டங்களை நிந்தவூரில் முன்னின்று செயற்படுத்தும் இச்சனசமூக நிலையமானது இரத்ததானம், நூலக அபிவிருத்தி செயற்பாடு, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், சிரமதானம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துவதோடு, நஞ்சற்ற உணவுப் பொருட்கள் மூலம் மக்களின் உயிர்களை பாதுகாப்பது சம்பந்தமான இவ்விழிப்புணர்வு செயத்திட்டத்தினை முன்னெடுத்திருப்பதானது எதிர்காலத்தில் தனி மனிதன் முதல் சமூகம் வரைக்கும் பல்வேறு உயரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.
மேலும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டோர்களுக்கு விவசாயப் பொறிமுறையில் நச்சுப் பதார்த்தங்களின் கலப்புத்த தன்மையும், விவசாய மற்றும் மரக்கறிச் செய்களில் பயன்படுத்தப்படும் நவீன பயிர்ச் செய்கை முறைகள் பற்றி தெளிவுறுத்தப்பட்டதோடு, இனி வரும் காலங்களில் இயற்கையாக பயிரிடக்கூடிய விவசாய உற்பத்திகள் பற்றியும் கலந்து கொண்ட அதிதிகளால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ள நோய் தடுப்பு முறை சம்பந்தமாக மௌலவி எம். எச். இத்ரீஸ் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதோடு இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.