பாகிஸ்தான் அணியின் தலைமை கோச்சராக இருந்தவர் வக்கார் யூனிஸ். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால் வக்கார் யூனிஸ் அதிரடியாக மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர் புதிய கோச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், இதுவரை தனது பதவியை ஏற்காமல் இருந்த அவர், நேற்று தென்ஆப்பிரிக்காவில் இருந்து லாகூர் வந்தடைந்தார். அதன்பின் தனது பதவியை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் அவர் கூறுகையில் ‘‘எனது குறுகிய கால திட்டம் பாகிஸ்தான் அணியில் கிரிக்கெட் கலாச்சாரத்தை ஏற்படுத்துவது. அதன்பின் நீண்ட கால திட்டம் அணியை மூன்று வகை கிரிக்கெட்டிலும் நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி மிகச்சிறந்த நிலையில் உள்ளது. துணைக்கண்டத்திற்கு வெளியே நன்றாக விளையாட முடியும் என்றால், அந்த அணி நல்ல முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பது அர்த்தம்.
மொகமது ஆமிர் தலைசிறந்த வீரர். அவர் சிறந்த வீரராக உருவாக்க நான் ஆர்வம் காட்டுகிறேன். மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு கவலையில்லை’’ என்றார்.
பாகிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், ஒருநாள் போட்டியில் 9-வது இடத்திலும், டி20 போட்டியில் 7-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.