பொறுமையைச் சோதித்தல்

 

வீட்டிலுள்ளவர்கள் வெளியில் செல்லும் வரை சுவர் மறைவில் ஒழித்திருந்து, அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் வீட்டைக் கொள்ளையடிப்பதற்கு காத்திருக்கும் கயவர்கள் கூட்டம் போல, இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களின் வாசற்படியில் இனவாதம் படுத்துக் கிடக்கின்றது. பள்ளிவாசலை கட்டுவதற்கும் பள்ளிவாசலை விரிவுபடுத்துவதற்கும் மூன்றாம் தரப்பினரின் முன்னே முஸ்லிம்கள் மண்டியிட வேண்டிய நிலைமை இன்னும் முற்றாக மாறவில்லை. சட்டத்தின் காந்தப் புலன், தன்னையும் அறியாமல் பேரினவாதத்தை நோக்கி இழுக்கப்படுவதையே காண்கின்றோம். நல்லாட்சி அரசாங்கமானது இவ்வாறான காளான் பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறியாமல், கோடரியால் தறிக்கும் நிலை வரும்வரை விட்டு வைக்கப்போகின்றதா என்ற வினாவே, பள்ளிவாசல்களின் மினராக்களையும் விகாரைகளின் தாது கோபுரங்களையும் விட உயர்ந்ததாக இன்று நம்முள் எழுந்து நிற்கின்றது.

 

எதைச் சொல்வது, எதை எழுதுவது என்று தெரியவில்லை. ‘ஆயிரம் மூங்கில்காடுகளை அழித்து ஒரேயொரு புல்லாங்குழல் செய்தேன். ஊதும்போதுதான் தெரிந்தது அதுவும் ஊமையென்று!’ என ஒரு பிரபல முஸ்லிம் கவிஞர் எழுதினார். உண்மையில் இது காதல் கவிதை. ஆனால், நடப்பு யதார்த்தங்களின்படி இலங்கை முஸ்லிம்களுக்கு நன்றாக பொருந்துகின்றது. எத்தனையோ சிரமங்களை எதிர்கொண்டு, ராஜபக்ஷக்களை எதிர்த்து, நல்லாட்சி அரசாங்கத்தை சிறுபான்மை மக்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தனர். ஆனால் அந்த அரசாங்கமே இன்று இவ்வாறு பராமுகமாக நடந்து கொள்கின்றமை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் மனச் சலிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மக்களின் எதிர்பார்ப்பு

 
நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற்ற பின்னர் பொதுவாக சிறுபான்மை சமூகங்கள் மத்தியிலும் குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் ஒரு ஆறுதல் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. 2012 இன் பிற்பகுதியில் இருந்து சுமார் 2 வருடங்களாக தாம் எதிர்கொண்ட இன, மத அடிப்படையிலான நெருக்குவாரங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஒரு ஆட்சிக் கட்டமைப்பு என்பது இனவாதத்திற்கு ஒருக்காலும் இடமளிக்காது என்றும், அதையும் மீறி இனவாதம் பேசும் சக்திகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தும் என்றும் அவர்கள் நம்பியதிலும் வியப்பேதும் கிடையாது.

 
இலங்கையில் பின்நவீனத்துவ இனவாதக் கொள்கைகளை போஷித்து வளர்த்து வருகின்ற பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த முன்னணி செயற்பாட்டாளர் ஒருவராவது சிறைப்பிடிக்கப்படுவார் என்று நினைத்த முஸ்லிம்கள் ஏராளம் பேர். இதுவொரு சிங்கள நாடு, ஒரு பௌத்த பிக்குவுக்கு மதிப்பளிக்காமல் விடுவதே பெருங்குற்றம் என்றிருக்கின்ற போது, காவியுடையில் வருகின்ற யாரொருவரையும் கைது செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதைப் பற்றி சிந்தித்த முஸ்லிம்கள் மிகக் குறைவு. ஆனால், பெரும்பாலான முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு இன்று வரைக்கும் நிறைவேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாறாக, ‘சிங்ஹலே’ என்ற புதிய அமைப்பு மிகச் சூட்சுமமான முறையில் உருவாகியிருக்கின்றது. புதிய ஆட்சி உருவான ஆரம்ப நாட்களில் கடும்போக்கு இயக்கங்களின் முக்கியஸ்தர்கள்; அமைதியாக இருந்தனர் அல்லது பதுங்கினர். இப்போது மீண்டும் இனவாதம் சிறுபான்மையினர் மீது சீறிப் பாயத் தொடங்கியுள்ளது.

muslim  ministers rishad
முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழர்களும் சிலபோதுகளில் கிறிஸ்தவர்களும் கூட இனவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளமை கண்கூடு. மத ரீதியாக உணர்வுவயப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் இருப்பதாலும், சமய, பொருளாதார அடிப்படையில் அவர்களை மட்டம்தட்டும் எண்ணம் இனவாதிகளுக்கு இருக்கின்றமையாலும் வழக்கம்போல முஸ்லிம்கள் அதிகமாக குறிவைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. கம்பளை மதீனா தேசிய பாடசாலை தொடர்பான வதந்திகள், வெலிமடையில் முஸ்லிம் பாடசாலை அமைப்பதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு, கிழக்கு முதலமைச்சரின் செயற்பாடு இனவாத கண்கொண்டு பார்க்கப்பட்டமை ஆகிய நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கண்டியிலும் கொழும்பின் புறநகர் பகுதியிலும் இரண்டு பெரிய இனவாத முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 
கண்டியில் உள்ள லைன் பள்ளிவாசலின் ‘மினரா’ எனப்படும் நிர்க்குமிழி வடிவத்திலான கோபுரத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்ஹலே ஜாதிக பலமுலுவ என்ற அமைப்பின் பெயரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதேபோல், தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு இனவாதிகள் பாரிய தடையை விதித்திருக்கின்றனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து முஸ்லிம்கள் வழங்கிய உதவிகளை சில பிக்குகளும் பௌத்த சகோதரர்களும் சிலாகித்து, நன்றி பாராட்டி பேசிக் கொண்டிருக்கின்ற சமகாலத்திலேயே கண்டியிலும் தெஹிவளையிலும் கடும்போக்காளர்கள் பள்ளிகளுக்கு கொள்ளி வைப்பதற்காக மடித்துக் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். எத்தனை அனர்த்தங்கள், அழிவுகள் ஏற்பட்டாலும் திருந்தாத ஜென்மங்களும் இருக்கின்றன என்பதற்கு இவ்விரு சம்பவங்களும் காலத்தின் அத்தாட்சிகளாக கொள்ளப்படலாம்.

 
கண்டி லைன் பள்ளிவாசல் சர்ச்சையும் தெஹிவளை பாத்தியா பள்ளிவாசல் விவகாரமும் அடிப்படையில் நிர்மாணப்பணி சார்ந்த பிரச்சினைகளே. ஒன்று, உயரமாக கட்டுவதில் எதிர்ப்பை சந்தித்துள்ளது. மற்றையது, சற்று அகலமாக விஸ்தரிப்பதில் முட்டுக் கட்டையை எதிர்கொண்டுள்ளது. ஆனால், இதனை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இவ்விரு விவகாரங்களும் மாறுபட்ட தன்மைகளை கொண்டுள்ளதை அடையாளம் காண முடியும்.

 
கண்டி சர்ச்சை

 
கண்டி லைன் பள்ளிவாசலின் மினராவை அமைப்பதற்கான பணி ஓரிரு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு அனுமதி பெறுதல் சார்ந்த சிக்கல்கள் காணப்பட்ட நிலையில் இதுகாலவரைக்கும் இதன் நிர்மாணப்பணி நிறைவு செய்யப்படவில்லை. இப்போது அதனை நிர்மாணித்து முடிப்பதற்கு எத்தனித்த வேளையிலேயே பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பள்ளிவாசலுக்கு முன்னால் அமர்ந்த பௌத்த பிக்குகளும் பிற ஆர்ப்பாட்டக்காரர்களும் மினராவின் உயரம் புனித தலதா மாளிகையின் உயரத்துடன் போட்டிபோடுவதாக குறிப்பிட்டு, அதன் கட்டுமானப் பணியை நிறுத்துமாறு கோரியுள்ளனர். இதனால் ஏற்பட்ட களேபர சூழலை அடுத்து உடனடியாக நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

 
உண்மையில், லைன் பள்ளிவாசல் தலதா மாளிகையில் இருந்து 200 மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. உத்தேச மினராவை தலதா மாளிகையின் உயரத்துக்கு அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கவும் இல்லை என்று நிர்வாகிகள் கூறுகின்றனர். அவர்களது கருத்துப்படி, திட்டமிட்டபடி மினராவை அமைத்தாலும் அது தலதா மாளிகையை விட 50 அடி உயரம் குறைந்ததாகவே காணப்படும். இது உண்மையாயின், சிங்களவர்கள் முன்வைக்கின்ற விவாதம் அடிப்படையற்றதும் வீம்புத்தனமானதும் ஆகும். இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் முகப்பை மறைக்கும் விதத்தில் புத்தர் சிலையை அமைக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கின்ற கடும்போக்கு பௌத்தர்கள், அதில் நியாயம் உள்ளது என்று சண்டையிடுகின்ற இனவாதிகள், தலதா மாளிகைக்கு எங்கோ தொலைவில் இருக்கின்ற பள்ளிவாசலின் மினராவை கொஞ்சமேனும் உயர்த்திக் கட்டக் கூடாது என்று சொல்வதானது, இனவாதிகளின் ‘ஆளுக்கொரு நீதி’ என்ற மனப்பாங்கை தெட்டத் தெளிவாக வெளிக்காட்டுகின்றது.

 

muslim  ministers rishad
இந்த இழுபறிகளுக்கு இடையில் அமைச்சர் ஹலீம் தலைமையிலான குழுவினர் அஸ்கீரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கருத்துவெளியிட்ட பீடத்தின் தேரர் ஒருவர், ‘உங்களுக்கு இங்கே கூட்டம் நடாத்தவும் மத அனுஷ்டானம் செய்யவும் அனுமதியுண்டு. ஆனால் நீங்கள் இன்னுமின்னும் உயர்த்திக் கட்டுவதற்கு எத்தனிக்கின்றீர்கள். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. மக்கள் எம்மைப்போல இருக்கமாட்டார்கள். கண்டியில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. அந்த அளவுக்கு அதிகமான விகாரைகள் கண்டியில் இல்லை. எனவே நிலைமையை குழப்பிக் கொள்ள வேண்டாம்’; என்று கூறியுள்ளார். அந்த தேரர் சற்று காட்டமான தொனியில் பேசியதையும் இதற்கு பதிலளித்த முஸ்லிம் தரப்பினர் வார்த்தைகளை அடக்கி ஒடுக்கி கனதி குறைத்து பவ்வியமாக பதிலளித்ததையும் காண முடிந்தது. கடைசியில், நல்ல சமிக்கை கிடைக்காத முஸ்லிம் தரப்பினர், இப்போதிருக்கின்ற நிலையிலேயே மினராவின் நிர்மாண பணியை முடிவுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு வந்திருக்கின்றனர்.

 
கண்டி லைன் பள்ளிவாசல் காணியானது புனித தலதா மாளிகையினால் 100 வருடங்களுக்கு முன்னர் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது என்று மேற்படி சந்திப்பில் தேரர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறான தகவல் என்று முஸ்லிம்கள் கூறுகின்றனர். பிரித்தானியரினால் 1905 இல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலே இனத்தவர்கள் தொழுவதற்காக பிரித்தானியரால் வழங்கப்பட்ட இடத்திலேயே இப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் ‘மலே பள்ளிவாசல்’ என்ற பெயரே பின்னர் ‘லைன் பள்ளி’ என்று மாறியிருக்கின்றது. இலங்கையில் சிறுபான்மையினரின் வரலாற்றை இருட்டடிப்புச் செய்த பேரினவாதம் இப்போது லைன் பள்ளிவாசலின் சரித்திரத்தையும் திரிபுபடுத்திக் கூறுவதை காண்கின்றோம். இந்த இடத்தில், கண்டி தலதா மாளிகைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு, கண்டி வாவியைச்சூழ குடியிருந்த ஆதி முஸ்லிம்கள் எவ்வாறு தெல்தோட்டைக்கும் உடத்தலவின்ன பிரதேசத்திற்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதையும் அதற்குப் பின்னால் இருந்த சக்திகளையும் பற்றி நமக்கு தெரியும். ஆனால் அதுபற்றியெல்லாம் விலாவாரியாக குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை.

 
உண்மையாகவே, லைன் பள்ளிவாசலில் மினரா அமைப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்று தெரியவருகின்றது. பள்ளிவாசல்களைப் பொறுத்தமட்டில் மினரா என்பது பாரம்பரிய கட்டிடக் கலையின் வடிவமே அன்றி, மார்க்கக் கடமையை நிறைவேற்ற மிக மிக அத்தியவசியமான ஒரு பகுதியல்ல என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல், உலகின் பல பாகங்களில் உள்ள தொழுமிடங்கள் ஒரு பள்ளிவாசல் போலவே இல்லை. சாதாரணமான கடை அறைகளைப் போலவும், கூடாரங்கள் போலவும் எத்தனையோ பள்ளிவாசல்கள் உலகெங்கும் இயங்குகின்றன. அத்துடன் புனித தலதா மாளிகை அமைந்துள்ள பிரதேசம் என்பதால் அஸ்கிரிய பீடம் போன்ற உயரிய சபைகளை பகைத்துக் கொண்டு மினராவை நிர்மாணிக்க முயற்சி செய்தால், அதை இனவாதிகள் மிக இலகுவாக இனமுறுகலாக ஆக்கிவிடும் அபாயமும் இருக்கின்றது.

 

kandy mosque
எனவே, இவ்விடயத்தில் முஸ்லிம்கள் கொஞ்சம் பொறுத்துப் போகலாம். அதனால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் குறைந்து போகமாட்டாது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இதில் இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், மினரா அமைப்பது என்பது மாநகர சபையுடன் தொடர்புபட்ட விடயம் இதில் ஏன் இனவாதிகளும் பௌத்த துறவிகளும் தலையிடுகின்றனர்? என்ற கேள்வியாகும். அத்துடன், முன்னொரு காலத்தில் பள்ளி கட்டுவதற்கு தடைபோட்ட இனவாதிகளிடம் இன்று மினரா கட்டுவதற்கும் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில், இன ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் இவ்விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டால், அதை பேரினவாதிகள் எவ்வாறு மதிப்பிடுவார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. ஒருவேளை, முஸ்லிம்கள் பயந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு இனி எல்லாவற்றிலும் பிக்குகள் மூக்கை நுழைக்க முற்படுவார்களோ என்ற சந்தேகம் காணப்படுமாயின், இப்போதே மூக்கணாங்கயிற்றை இழுத்தப் பிடிப்பதே நல்லது. இல்லாவிட்டால் இனவாதம் தலையிலேறி நர்த்தனம் புரிய ஆரம்பித்துவிடும். இந்த விடயத்தில் நாங்கள் சமரசமாகப் போகின்றோம் அதற்காக எல்லா விடயங்களிலும் தடை போடக் கூடாது என்று தெளிவாக பேசி, மினரா விவகாரத்திற்கு தீர்வு காணலாம். அன்றேல், சட்டத்தின் துணைகொண்டு நிதானமான முறையில் தமது மதஉரிமையை முஸ்லிம்கள் இன்றே உறுதிப்படுத்த வேண்டும்.

 
தெஹிவளை முறுகல்

 
இதற்கு சமாந்திரமாக, கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெஹிவளை பாத்தியா பள்ளிவாசல் விஸ்தரிப்பு விவகாரம் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு இப் பள்ளிக்குள் நுழைந்த பிக்குகளும் சில சண்டியர்களும் அதனை மூடிவிடுமாறு கடுமையாக அச்சுறுத்தியதை தொடர்ந்து, அங்கு வழக்கமான மத அனுஷ்டானங்கள் சில தினங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தன. இப்பள்ளிவாசலும் அங்குள்ள முஸ்லிம்களும் அருகிலுள்ள விகாரைக்கும் சிங்கள மக்களுக்கும் பல நல்லெண்ண உதவிகளை எல்லாக் காலத்திலும் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இனவாதம் ஊறிய மனதுகளில் நல்லெண்ணம் இன்னும் உருவானபாடில்லை. தொடர்ந்து இப்பகுதி முஸ்லிம்களை சீண்டும் விதத்தில் இனவாதிகள் நடந்து கொள்வதாக கூறப்படுகின்றது.

 
இப்படியிருக்கையில், பாத்தியா பள்ளிவாசலை சற்று விஸ்தரிப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நோன்புகாலத்தில் அதிகமான மக்கள் பள்ளிக்கு வருவதால் விஸ்தரிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பள்ளிக்குள் நுழைந்த பொலிஸார் அப்பணிகளை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, எதிர்;தரப்பினருக்கு பாதிப்பில்லாத விதத்தில் சிறிய விஸ்தரிப்பை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. என்றாலும், அங்கிருக்கின்ற சூழலில் அதைக் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு தொழுவதற்கு எந்த தடையும் போடப்படவில்லை. ஆயினும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் பாத்தியா பள்ளிச்சூழலை ஆட்கொண்டிருக்கின்றது.

 
இப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு தொடர்ச்சியாக சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்டி லைன் பள்ளிவாசலை போன்று மினரா நிர்மாணம் இங்கு சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக, பிரதான பள்ளிக்கட்டிடத்தை திருத்துவதற்கே முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் முஸ்லிம் அரசியல்வாதிகளும் நலன்விரும்பிகளும் அதீத கவனம் செலுத்தியுள்ளதை காணமுடிகின்றது. குறிப்பாக, அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா மற்றும் பல முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். வன்னியில் இருந்து மக்கள் காங்கிரஸ் தலைவர் களத்திற்கு வந்துபோயிருக்க, கொள்ளுப்பிட்டியில் இருக்கும் இன்னுமொரு அரசியல் தலைவர் இன்னும் தெஹிவளைக்கு வந்து சேர்ந்ததாக செய்திகளில் காணக்கிடைக்கவில்லை.

 
இவ்விடயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடிக் கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் இரு நாள்; காலஅவகாசம் கேட்டுள்ளார். அத்துடன் இவ்விடயத்தில் சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் நடந்துகொண்ட விதத்தை அவர் விமர்சித்திருக்கின்றார். சமகாலத்தில் இப்பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஆனால் இத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இந்த நிமிடம் வரைக்கும் நல்லதொரு தீர்வு எட்டப்படவில்லை என்பதே இங்கு கவனிப்பிற்குரியதாகின்றது.

 
இந்நிலைமைகளை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும், மத அடிப்படையிலும் இன்னும் தம்மை தயார்படுத்திக் கொள்ளவில்லை. பிரச்சினை வரும்போது மட்டும் ஒப்பாரி வைத்துவிட்டு, மறுகணமே அடுத்த வேலையைப் பார்க்கின்ற சமூகமாகவே இலங்கை முஸ்லிம்களை சொல்ல முடியும். முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றி பெருமையாகச் சொல்ல ஒன்றும் கிடையாது. அதுபோலவே மத ரீதியாகவும் பிளவுபட்டுள்ளனர். தலைப்பிறை பார்ப்பதற்கும் அனர்த்தங்களின் போது உதவுவதற்காகவும் பிரச்சினை வந்தால் பொறுமைகாக்குமாறு அறிவுறுத்துவதற்காகவுமாகவே இஸ்லாமிய அமைப்புக்கள் உருவாக்கப்பட்டது போல தெரிகின்றது. ஆயினும், சில அமைப்புகள், அரசியல்வாதிகள், நலன்விரும்பிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் உத்வேகம் இவ்வாறான சந்தர்ப்பங்களின் பாராட்டக் கூடியதே.

 
அரசின் பொறுப்பு

 
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்கள் அதிகமான மதம்சார், இனம்சார் இழப்புக்களை இனவாதத்திற்கு பலிகொடுக்க நேரிட்டது. ஹலால் முதற்கொண்டு அளுத்கமை கலவரம் வரை முஸ்லிம்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னாலும் பலரது நலன்கள் மறைந்திருந்தன. உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்சார், இராணுவ, புலனாய்வு, இனத்துவ உள்நோக்கங்களும் ராஜதந்திரங்களுமே பொதுபலசேனா போன்ற அமைப்புக்களுக்கு உக்கமருந்தை வழங்கியிருந்தது என்பது பின்னர் தெரியவந்தது. இப்போதும், அதேபோன்றதொரு இரண்டாம் கட்ட நடவடிக்கையே மேற்கொள்ளப்படுவதாக அனுமானிக்கலாம். ஆட்சியைக் குழப்புவதும் அதன்பேரில் முஸ்லிம்களை பலிக்கடாவாக்குவதும், அதன் பழியையும் முஸ்லிம்கள் மீதே போடுவதுமே இனவாத சக்திகளின் பிரதான நோக்கமாக இருக்கக் கூடும்.

 
இனவாதத்தை வளர விட்டதன் காரணமாக முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடிப்பதற்கு முன்னின்றனர். இன்று, அவர்களால் நிறுவப்பட்ட நல்லாட்சியிலும் அதே நிலைமை ஏற்படுமாக இருந்தால் சிறுபான்மை மக்கள் மிகவும் ஏமாற்றப்பட்டுப் போவார்கள். மேலே குறிப்பிடப்பட்டது போல, முஸ்லிம்களின் பொறுமை ஏன் சோதிக்கப்படுகின்றது என்பதும், அரசாங்கம் பௌத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது என்ற யதார்த்தத்தையும் முஸ்லிம்கள் அறிவார்கள். எனவே, முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் விளங்கிக் கொண்டு பொறுமை காப்பார்கள் என்று அரசாங்கம் வாழாவிருக்க முடியாது. எனவே உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டி மற்றும் தெஹிவளை பள்ளிவாசல்களின் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

 
இந்த நாட்டில், முஸ்லிம்களின் விடயத்தில் ஏன் சிங்கள கடும்போக்காளர்கள் மூக்கை நுழைக்கின்றார்கள்? காவுயுடைதாரிகள் ஏன் சட்டத்தை கையில் எடுத்து காட்டுமிராண்டித்தனம் புரிகின்றனர்? அரச நிர்வாக கட்டமைப்பினால் கையாளப்பட வேண்டிய விடயங்களை எதற்காக இனவாதிகள் கையாள்கின்றார்கள்? அந்த வேளையில் எல்லாம் சட்டமும் நீதியும் ஏன் கைகட்டி புதினம் பார்க்கின்றது என்பதை, அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு பொறுப்புச்சொல்ல கடமைப்பட்டுள்ளது.

 
• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 11.06.2016)