நாடாளுமன்றின் ஆயுட்காலம் நெருங்கி விட்டது !

ranil-wickramasinghe-1-colombo-telegraphநாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து அதன் ஆயுட்காலத்தை இன்னும் நீடித்துகொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் வைத்து செவ்வாய்க்கிழமை(12) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த சட்டமூலத்தை புதிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கே எதிர்ப்பார்த்திருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  நாட்டின் கொள்கையாக ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் பயங்கரவாதிகள் பிரச்சினை மட்டுமன்றி வெளிநாடுகளில் செயற்படும் பயங்கரவாத அமைப்புகள் இலங்கையை தளமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான சட்டங்கள் அதில் உள்ளடக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.