கோல்டன் கீ நிறுவனத்தின் அனைத்து வைப்பாளர்களினதும் பணம் அவர்களுக்கு மத்திய வங்கியின் ஊடாக மீள வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் அனைத்து வைப்பாளர்களுக்கும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள் ளது.
எனவே, இது தொடர்பாக வைப்பாளர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கொழும்பிலுள்ள நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஆகியோருடன் கோல்டன் கீ நிறுவனத்தில் பணம் வைப்பு செய்தவர்கள் சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்தினர். இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்இ கோல்டன் கீ நிறுவனத்தில் நமது பணத்தை வைப்பிலிட்டவர்கள் அதனை மீளப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. அந்நிறுவனமும் மூடப்பட்டது.
இவ்வாறு பல வருடங்களாக பணத்தை வைப்பிலிட்டோர் சிரமங்களை அனுபவித்தனர். இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இன்று வைப்பாளர்களை சந்தித்தோம்.
இவர்கள் அனைவருக்கும் அவர்களது பணத்தை மத்திய வங்கியின் ஊடக வழங்குவதற்கு நடவடிக்கைகளை ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மேற்கொள்வார். இதற்கமைய 2 மாதத்திற்குள் 2 மில்லியன் வைப்புக்களுக்கான கொடுப்பனவுகளையும் அதன் பின்னர் 2 மாதங்களுக்குள் மேலும் 2 மில்லியனுக்கான கொடுப்பனவுகளை வழங்கவும் அனைத்து வைப்பீட்டாளர்களுக்கும் ஒரு வருடத்திற்குள் அவர்களது பணத்தை வழங்கி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை வைப்பாளர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டுமென்ற நிபந்தனையையும் நாம் முன் வைத்தோம். இதனை வைப்பாளர்கள் ஏற்றுக் கொண்டனர். அத்தோடு அது தொடர்பில் எழுத்து மூலம் உறுதிமொழியை கோரினர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது எழுத்து மூலமான உறுதி மொழியை நீதிமன்றத்துக்கு நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தோம். அதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக மத்திய வங்கி ஆளு நர் மேற்கொள்வார் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.