மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்குமிடையிலான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேசகிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது.
இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளாக எம்.வீரக்கொடி மற்றும் மதுஷானி ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகள் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டச் சேர்க்கையில் ஈடுபட்டனர். மதுஷானி 52 பந்துகளுக்கு 23 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த எம். வீரக்கொடி 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 8 ஓட்டங்களால் தனது அரைச் சதத்தைத் தவறவிட்டார்.
அதற்கடுத்து களமிறங்கிய சுரங்கிக்கா 3 ஓட்டங்களுடனும்இ ஏ.மென்டிஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். எஸ் வீரக்கொடி இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் நின்று 24 ஓட்டங்களைப் பெற்றார். சமுதிகா 11 ஓட்டங்களை சேர்த்தார். ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை மகளிர் அணி 49.5 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
150 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 40.1 ஓவர்களில் 5 விக்கெட்டும் மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களுக்கு சரசரவென சரியஇ ஐந்தாவது விக்கெட்டிற்காக களமிறங்கிய வீராங்கனை டொட்டின் 84 ஓட்டங்களை விளாசினார். மறுமுனையில் அவருக்கு துணை நின்ற அக்லீரா 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சாளர் கௌசல்யா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.