மிக நீண்ட காலமாக மு.காவுடன் முரண்பட்டு நிற்கும் மு.காவின் தவிசாளர் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.அக் கடிதத்தை ஊடகங்களும் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ்வுடைய கலாமான புனித அல் குர்ஆன் மீது சத்தியம் செய்தவராகவே ஆரம்பம் செய்கிறார்.அல்லாஹ் மீதன்றி வேறு எந்தப் பொருள் மீதும் சத்தியம் செய்தலாகாது என்பது இஸ்லாமிய வழி காட்டல்.அல் குர்ஆன் மீது சத்தியம் செய்வது இஸ்லாமிய அடிப்படையில் பிழையாகும்.அல் குர்ஆன் மீது சத்தியம் செய்யும் வழமை எமது சமூகத்திடையே நிலைவுவதால் இவர் இவ்வாறு நடந்துள்ளாரென நினைக்கின்றேன்.மு.காவின் போராளிகள் பலர் இவரது அறிக்கைக்கு பதில் அறிக்கைகள் எழுதியுள்ள போதும் இவ் சத்திய விடயத்தை தூக்கிப் பிடிக்காமை அவர்களுக்கும் இது பற்றி போதிய தெளிவின்மை தெளிவாகிறது.குர்ஆன் ,ஹதீதை அடிப்படையாக கொண்டியங்கும் கட்சியின் தவிசாளருக்கு இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மை என்பது கூட மு.காவிற்குத் தான் கேவலம்.
இருப்பினும் இந்த இடத்தில் அவரது நோக்கமே ஆராயப்படல் வேண்டும்.இவ் அறிக்கையை தான் மறுமைக்குப் பயந்தவானாக எழுதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளதானது பஷீர் சேகுதாவூத் அல்லாஹ்வை பயந்துகொண்டு இவ் அறிக்கையை எழுதியுள்ளதை அறிந்துகொள்ள முடியும்.ஆதாரமற்ற விடயங்களை நிரூபிக்க சத்தியம் செய்வது இஸ்லாமிய வழி முறையாகும்.எனவே,இவர் கூற விளையும் விடயங்களுக்கு சற்று கனதியான பெறுமானம் வழங்கிப் பார்ப்பது பொருத்தமானதாகும்.
இவரது அறிக்கையில் பல்வேறு தர்க்க ரீதியான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதும்,அது எதனையும் யாராலும் தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இருப்பது மு.காவினரின் இயலாமையைக் காட்டுகிறது.இவரது அறிக்கையை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் அவரது முந்திய சில செயற்பாடுகளைக் காட்டி அவரது இவ் அறிக்கையை உடைக்க முயற்சிக்கின்றனர்.தர்க்க ரீதியான விடயங்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்வதே சிறந்த அறிவாளியின் பண்பு.தனது முந்திய செயற்பாடுகளின் பிழையை உணர்ந்து,இதனை வைத்து தன்னை பலரும் கேள்வி கேட்கலாம் என்பதை அறிந்து தான் தனது இவ் அறிக்கையின் தூய்மையினை வெளிப்படுத்தும் வகையில் பஷீர் சேகுதாவூத் இவ்வாறு சத்தியம் செய்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்றே என் மனம் கூறுகிறது.அவரது முந்திய செயற்பாடுகளால் தற்போது அவர் கூறுவதை பிழையென நிரூபிக்க விளைவது எவ் வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தர்க்க ரீதியான விடயங்களை பலரும் ஏற்கலாம் ஏற்காது போகாலாம்.அதற்கு மறுப்புத் தெரிவிக்கலாம் தெரிவிக்காதும் போகலாம்.இவரது தர்க்க ரீதியான பல விடயங்களுக்கு எவரும் பதில் வழங்காது போனாலும் அவர் மு.காவின் உயர்பீடத்தில் இச் செயலாளர் நியமனத்தின் போது நடைபெற்ற சில ஏமாற்று வேலைகளை அவ் அறிக்கையில் குறிப்பிடுள்ளார்.உயர்பீட செயலாளரெனக் கூறி கட்சியின் செயலார் நியமிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.இதற்கு மு.காவின் உயர்மட்டம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் இது தொடர்பில் பலரும் கூறியுள்ளனர்.அண்மையில் நான் எழுதிய கட்டுரையில் கூட இது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.என்னைப் போன்று பல கட்டுரையாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பிருந்தனர்.தொண்ணூறு உயர்பீட உறுப்பினர்களில் ஒருவருக்காவது இதற்கு மறுப்புத் தெரிவிக்க முடியாதா?கட்டுரையாளர்களுக்கு பதில் அளிக்காது போனாலும் களத்தில் நின்ற மு.காவின் செயலாருக்கும் மௌனப் பாணியில் பதில் வழங்குகின்றமை மு.கா தலைமை இவ்வாறான சில ஏமாற்று வேலைகளைச் செய்துள்ளமையைத் தெளிவாக்குறது.உயர்பீட உறுப்பினர்களை ஏமாற்றும் இவர்களுக்கு மக்களை ஏமாற்றச் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?
இது தொடர்பில் நான் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு சிறு பகுதியையும் இணைக்கின்றேன்.
//////////////////////////////////////////////மு.காவின் யாப்பு மாற்றம் தொடர்பான உயர்பீடக் கூட்டத்தில் யாப்பு மாற்றங்கள் பற்றி வாசிக்கப்பட்ட போது ஆறு மேலதிக செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன் போது சில சல சலப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு அதனைச் சமாளிக்க அவ் மாற்றப்பட்ட யாப்பை ஆங்கிலத்தில் வாசித்ததான கதைகளும் உலா வருகின்றன.இவ் ஆறு செயலாளர்களில் ஒருவர் தான் உயர் பீட செயலாளரென குறிக்கப்பட்டிருந்தது.இதன் பின்பு இவ் யாப்பு மாற்றம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் உயர் பீட செயலாளரும் கட்சியின் செயலாளரும் என்ற இரு பதவிகள் மன்சூர் ஏ.காதருக்கு குறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் மொஹமத் ஹசனலியைத் தொடர்பு கொண்டு தொடர்பில் வினவியுள்ளார்.ஹசனலி இவ்வாறானதொரு யாப்பு மாற்றம் நிகழவில்லை என்றாதோடு தானே மு.காவின் செயலாளரென பதிலளித்துள்ளார்.
ஒரு கட்சியின் செயலாளரை மாற்றும் போது முன்பு இருந்த செயலாளருடன் முரண்படாதவாறு சுமுகமான மாற்றமிருக்க வேண்டும்.அல்லது அவரை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் முன் வைக்கப்படல் வேண்டும்.அங்கு ஹசனலியை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் இடம்பெறவுமில்லை சுமுகமான மாற்றம் நடைபெறவுமில்லை.ஹசனலியின் பதவிக் குறைப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து கட்சிக்குள் சில சல சலப்புக்கள் தோன்றியுள்ள போதும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டறிக்கையில் அது தொடர்பான விடயங்கள் எதனையும் உள்ளடக்காது அமைச்சர் ஹக்கீமின் கையொப்பத்துடன் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையாளருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்குமிடையில் எதுவித தொடர்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த கூட்டறிக்கையில் இது தொடர்பான சர்ச்சைகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் குறித்த செயலாளர் மாற்றம் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளதாம்.இது தொடர்பில் தெளிவு படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மு.காவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஒரு பிரதியை ஹசனலிக்கும் வழங்குமாறு பிரதி இடப்பட்டுள்ளது.இப் பிரதி ஹசனலியின் கையைச் சென்றடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.////////////////////////////////////////////////////////////////////////////////////
நான் மேலே குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்குமான ஆதாரங்களை கண்ணுற்றே இக் கட்டுரையை வரைந்தேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.