வெளிநாட்டில் சட்டவிரோத பணம் பதுக்கிய இலங்கையர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, அமைச்சர் சம்பிக ரணவகவின் ஆலோசகர் வித்யா அமரபால, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் அண்ணணும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான ஜகத் சுமதிபால ஆகியோர் குறித்த விபரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளன.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சேனக துணுவிலவும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இம்முறை வெளியாகியுள்ள இரண்டாம் கட்டப் பட்டியலில் இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களும் சட்டவிரோத பணப்பதுக்கலில் ஈடுபட்டுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
குறித்த பணப்பதுக்கல் விவகாரத்தில் இலங்கையில் இருந்து மூன்று நிறுவனங்கள் மற்றும் நான்கு தனிநபர்கள் இடைத்தரகர்களாக செயற்பட்டுள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள பட்டியலில் முன்னைய பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த 46 பேரும் உள்வாங்கப்பட்டிருப்பதுடன், மொத்தமாக 65 பேரின் பெயர்கள் இன்று வெளியாகியுள்ளன.
இதற்கு மேலதிகமாக இன்னும் சிலரின் விபரங்கள் இரண்டொரு நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.