கலீல், இல்யாஸ் மௌலவிகளின் இடைநிறுத்தம் நீக்கம்? மு.கா. பேச்சுவார்ததையில் இணக்கம்

எம்.சி.நஜிமுதீன்

ilyaas kaleel mowlavi

 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மௌலவிமார்களான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம்.இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை களைவதற்கு கட்சியின் உயர்பீடத்தால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

எனினும இடைநிறுத்த நீக்கம் தொடர்பில் தமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை குறித்த இருவரும் தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் கட்டாய உயர்பீட  கூட்டம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து தலைவர் மற்றும் செயலாளருக்கிடையில் இழுபறி நிலை ஆரம்பமானது. 

பின்னர் கட்சியின் மஜ்லிஷுஷ் சூறா தலைவர் ஏ.எல்.எம்.கலீல் மௌலவி  மற்றும் உலமா காங்கிரஸ் பிரதிநிதி எச்.எம்.எம்.இல்யாஸ் மௌலவி ஆகிய இருவரும் கட்சித் தலைமைக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு அவ்விருவரையும் கட்சியின் உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தினர்.

அது தொடர்பில் அவ்விருவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து கட்சிக்குள் முரண்பாடு வலுத்ததுடன் ஆதரவாளர்களிடமிருந்து பல்வேறு அழுத்தங்களும் ஏற்பட்டன. இதேவேளை கடந்த  செவ்வாய்க்கிழமை கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின்போது, கட்சிக்குள் நிலவும் முரண்பாடு களைவதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக் ,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 

அந்தக்குழு உடனடியாக தமது பணிகளை ஆரம்பித்து பல கட்டப்  பேச்சுவார்ததைகளை நடத்தியது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளருக்கிடையில் ஆறுகட்ட பேச்சுவார்ததைகள் நடத்தப்பட்டன.  எனினும் செயலாளரின் அதிகாரம் தொடர்பில் பேசுவதாயின், அதற்கு முன்னர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மௌலவிமார்களான கலீல் மற்றும் இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கப்பட வேண்டும் என ஹஸனலி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே அவ்விவகாரத்தில் இணக்கம் காணப்பட்ட பின்னரே அவ்விருவரினதும் இடைநிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் செயலாளரின் அதிகாரம் தொடர்பான விடயத்தில் குறித்த குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அந்தக்குழு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருடன் நாளை சந்திப்பொன்றை நடத்தவுள்ளதுடன் அதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கபடலாம்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.