சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 22 தொழிலாளர்களின் பிரேதங்கள் மீட்பு

இங்குள்ள டைனிங் பகுதியில் நேற்று தொடர்ந்துபெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வெள்ளநீரின் ஓட்டத்தால் உண்டான மண் அரிப்பினால் நிலச்சரிவும் ஏற்பட்டது. அவ்வகையில், இங்குள்ள புனல்மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.

201605091506124540_Death-toll-mounts-to-22-in-Chinas-landslide_SECVPF
புனல்மின்சார நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஏழு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மீதி 39 பேரின் நிலைமை என்னவானது? என்ற கேள்விக்குறியுடன் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மோப்ப நாய்களின் உதவியுடன் 600-க்கும் அதிகமான மீட்புக்குழுவினர் இரவு பகலாக அப்பகுதியில் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் வெளியானதும் பியூஜியான் மாகாண அரசை தொடர்புகொண்ட சீனப் பிரதமர் லி கெகியாங், அடுத்தடுத்த பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி 22 தொழிலாளர்களின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளவர்களை உயிருடன் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சீன அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.