இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகளுக்கு படகு மூலம் சென்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அடங்கிய குழுவொன்று கடந்த வாரம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்ததாகவும் அவர்கள் கடந்த 6ம் திகதி நாடு கடத்தப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
படகில் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்கள் எனவும் வந்தவுடனேயே அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் பீட்டர் டொட்டன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் ஒத்துழைப்புடன் ஒருநாளும் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முடியாது என்பதனையே இந்த நாடு கடத்தல் காட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.