க.கிஷாந்தன்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பியன் தோட்ட பிரஸ்டன் பிரிவில் (08.05.2016 அன்றும் 09.05.2016 அன்றும்) இரு தினங்களாக சிறுத்தைகள் இரண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இத்தோட்டத்தில் 4ம் இலக்க தேயிலை மலையில் இவ் இரண்டு சிறுத்தைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
08.05.2016 அன்று கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை 4 அடி கொண்டதாக இருந்தது. அதேவேளை 09.05.2016 அன்று காலை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுத்தை மூன்று அடி கொண்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தை ஒன்று பாய்ந்து செல்வதை கண்டு பீதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அதனை பின் தொடர்ந்து சென்ற போது மேலும் ஒரு சிறுத்தை தேயிலை காண் ஒன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
இதன்போது பயத்தில் அதிர்ச்சியுண்ட மூன்று பெண் தொழிலாளர்கள் மயங்க நிலையில் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சிகிச்சைகென அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இச்சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்துள்ள அக்கரப்பத்தனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இச்சம்மந்தமாக வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்துள்ளதையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனை செய்வதற்காக பொறுப்பேற்று வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இத்தோட்டத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.