முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை நீக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஒராண்டு காலத்திற்கு முன்னதாக பாதுகாப்புப் பேரவையில் இது குறித்து அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
பிரபுக்கள் பாதுகாப்பிற்கு இராணுவத்தை பயன்படுத்துவது இல்லை என அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுத்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கூட பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
நாட்டில் படையினர் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவே இருக்கின்றார்கள். ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பினை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வழங்குகின்றனர்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 105 இராணுவத்தினர் வழங்கப்பட்டிருந்தனர் இதில் 50 பேர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் ஏனைய இராணுவ வீரர்களும் நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.
150 பொலிஸ் உத்தியோகத்தர்களை கோரினாலும் மஹிந்தவிற்கு வழங்கத் தயார். மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.