“உலகிலே சூழலை மாசடையச் செய்தவர்கள் யார்? வளியை மாசடையச் செய்தவர்கள் யார்? இயற்கையை மாசடையச் செய்தவர்கள் யார்? இவையனைத்துக்கும் காரணம் மனிதர்களே என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என இன்று ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.
இலங்கை வாயு முகாமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையை எடுத்துக்கொண்டால் இன்று வளி மாசடைதல் தொடர்பாக அதிக கவலைக்கிடமான நிலையில் இருப்பது கண்டி நகரமே.
நான் சுற்றாடல்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையில் வளி மாசடைவதால் அதிகம் பாதிப்புக்குளாகியருந்த நகரம் கொழும்பு ஆகும்.
புறக்கோட்டை மற்றும் மரதானை பிரதேசமே அவையாகும். ஆயினும் இன்று அந்த சாதனையை கண்டி நகரம் முறியடித்துள்ளது. நாம் கடந்த நாட்களில் எஸ்பெஸ்டர் தகடுகளை தடை செய்தோம்.
அதனை 2018ல் நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதேபோல் 2020ல் இலங்கையில் எவரும் புகையிலை பயிரிட முடியாது என்றும் சில தீர்மானங்களை எடுத்தோம்.
நாம் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் பொலித்தீன் பாவனையை தடை செய்தல் தொடர்பாக விசேட ஒழுங்கு விதிகளை கெஸட் செய்தோம். அதை நடைமுறைப்படுத்தினோம்.
இன்று உலகில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழல் மாசடைதல் மற்றும் வளி மாசடைதல் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து கவனத்தில் கொண்டு இதற்கு உடனடி தீர்வு காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நோயாளிக்கு இன்று கொடுக்கப்பட வேண்டிய மருந்தை இன்றே கொடுத்தாக வேண்டும்.
நாளைக்கு கொடுப்பதால் பலனேதும் இராது. எனவே சூழல் மற்றும் வளி மாசடைதல் தொடர்பான தீர்மானங்களை இன்றே எடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.