மீதி 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்

dhoni

 

டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் தோல்வி கண்டுள்ளது. நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கெவின் பீட்டர்சன், பாப் டு பிளிஸ்சிஸ், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக காயத்தால் தாயகம் திரும்பியதும், சரியான பந்து வீச்சு கூட்டணி அமையாததும் புனே அணிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

கேப்டன் டோனியும் இதைத் தான் சொல்கிறார். இவர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா, ஜார்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா) இருவரும் புனே அணியுடன் இணைந்து நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களது வருகை நிச்சயம் புனே அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சமீப காலமாக ரன் குவிப்பில் மிரட்டி வருகிறார். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே புனே அணியால் அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வாய்ப்பு மங்கத் தொடங்கி விடும். அதனால் இன்றைய ஆட்டம் புனேக்கு வாழ்வா-சாவா மோதல் என்றே வர்ணிக்கலாம்.

புனே ஆல்-ரவுண்டர் ரஜத் பாட்டியா நேற்று அளித்த பேட்டியில், ‘தற்போதைய கட்டத்தில் எந்த ஒரு அணியையும் கணிக்க முடியாது. வெற்றி பெறும் அணிகள் தோற்கலாம். தோற்றுக் கொண்டிருக்கும் அணிகள் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம். எல்லாமே உத்வேகத்தில் தான் அடங்கி இருக்கிறது. எங்கள் அணிக்கு கவாஜா, பெய்லி இப்போது வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகையால் பலன் கிட்டும் என்று நம்புகிறேன்’ என்றார்.

அதே சமயம் ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி பெற்று இருக்கிறது. 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ள அந்த அணியில் இளம் வீரர்கள் குயின்டான் டி காக், ரிஷாப் பான்ட், கருண் நாயர், சஞ்சு சாம்சன், சாம் பில்லிங்ஸ் ஆகிய 25 வயதுக்குட்பட்ட பேட்ஸ்மேன்களே தூண்களாக இருக்கிறார்கள். 

இவர்களுடன் கேப்டன் ஜாகீர்கான், முகமது ஷமி, கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா, டுமினி ஆகிய மூத்த வீரர்களும் கலந்திருப்பதால், டெல்லி அணி சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தோல்வியால் துவண்டு கிடக்கும் டோனி அணியை தனது சொந்த ஊரில் பதம் பார்க்க டெல்லி டேர்டெவில்ஸ் ஆவலுடன் காத்திருக்கிறது