ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை குழு தனது அறிக்கையை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் சமர்பித்து இருந்தது. இதில் நிர்வாகிகள், வீரர்கள் என மொத்தம் 13 பேரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் 3 பேரது பெயர் மட்டுமே வெளியிடப்பட்டன.
முத்கல் கமிட்டியின் அறிக்கையில் உள்ள 10 வீரர்களின் பெயர் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டு இதுவரை வெளியிடாமல் இருந்தது. இந்த 10 வீரர்களின் பெயர் விவரத்தை வெளியிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.
லோதா கமிட்டி பரிந்துரை தொடர்பான வழக்கு விசாரணையின் போது 10 வீரர்கள் பெயர் விவரத்தை வெளியிட விரும்பி சுப்ரீம்கோர்ட்டில் கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, வீரர்கள் பெயரை வெளியிட விரும்புகிறோம். பொது மக்கள் முன்பு பெயர் விவரத்தை வெளியிடாதது ஏன்? சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி தான் விசாரணை நடத்தியது. முத்கல் விசாரணை அறிக்கையில் உள்ள அனைத்து பெயர்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.