அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் மதுரையில் வாக்கு சேகரித்தார்.
மதுரை புதூர் பஸ் நிலையம், ஆரப்பாளையம், பழங்காநத்தம் உள்ளிட்ட 5 இடங்களில் சரத்குமார் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆதரவு கேட்டு உங்களை எல்லாம் சந்திக்க வந்துள்ளேன். இதுவரை நான் சென்ற இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளும், நலத்திட்டங்களும் மக்களை சென்றடைந்துள்ளதுதான்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளார். சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிவித்த 185 திட்டங்களுக்கு செயல்முறை வடிவம் கொடுத்து நிறைவேற்றி வருகிறார்.
எனவே அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டனர். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. வினர் தேர்தல் பிரசாரத்தில் அளித்து வருகின்றனர். தி.மு.க–காங்கிரஸ் இடையே அமைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி.
மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியவரே கருணாநிதிதான். அவர் தற்போது மதுவிலக்கை கொண்டு வருவதாக கூறுகிறார். அது அவரால் முடியாது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் சொன்னதை நிச்சயம் செய்வார்.
மக்கள் நலக்கூட்டணி சார்பில் முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்று யாருக்குமே புரியவில்லை. ஒரு முதல்–அமைச்சர் வேட்பாளருக்கான தகுதி அவரிடம் இல்லை. அவரை ஏற்றுக்கொள்ளவும் மக்கள் தயாராக இல்லை.
மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்பவர் ஜெயலலிதா மட்டும்தான். எனவே தமிழகம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்வது நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.