க.கிஷாந்தன்
அக்கரப்பத்தனை அயோனா தோட்டத்தில் சிறுத்தை புலி நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை எற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக ஒரு வாரமாக 04 சிறுத்தைகள் இத்தோட்;த்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்தில் பதுங்கி இருப்பதுடன் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கோயில் இருக்கும் பிரதேசத்தில் காணப்படும் ஆலமரத்தில் இருப்பதாகவும், தோட்ட அதிகாரிக்கு தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தோட்ட அதிகாரியால் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதுடன் நல்லதண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு 04 ம் திகதி அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக 04 ம் திகதி புதன் கிழமை இரவு 09 மணியளவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அத்தோட்டத்திற்கு வருகைதந்து சிறுத்தைகள் இருக்கும் பகுதியை அவதானித்ததுடன் சிறுத்தைகளை விரட்டுவதற்காக பட்டாசுகள் கொழுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை அல்பியன் பிரஸ்டன், மோர்சன், டொரிங்டன் போன்ற தோட்ட மக்களும் சிறுத்தைகளின் நடமாற்றம் காரணமாகவும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அட்டன் நகரத்தில் இருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான வீதியில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவதால் அப்பாதையின் ஊடாக பயனிக்கும் வாகனசாரதிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.