சிறுபான்மை மக்களின் நலன் தொடர்பில் அமைச்சர் றிசாத் – நோர்வே நிபுணர் வொலன்ட் சந்திப்பு

சுஐப் எம் காசிம்
உலக நாடுகள் பலவற்றின் தேர்தல் மறு சீரமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வம் காட்டி அதற்கு உதவி வரும் நோர்வே நிபுணரான ஆர் எம் வொலன்ட் இன்று (5) காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான தூதுக்குழுவை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைர்தீன், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சட்டத்தரணி என் எம் ஷஹீட், ஆய்வாளர் எம் ஐ எம் மொஹிடீன், அமைச்சரின் இணைப்பாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
image_Fotor
மாற்றுக்கொள்கைகளுக்கான தேசிய நிலையத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள நிபுணர் ஆர் எம் வொலன்ட் இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தனது கருத்துக்களையும் ஆவண ரீதியான சான்றுகளையும் முன்வைத்தார்.
நேபாளம் போன்ற தென் கிழக்காசிய நாடுகளில் பரீட்சித்துப்பார்த்து வெற்றி கண்ட முறைகளையும் தனது அனுபவங்களையும் விரிவாக விளக்கினார்.
தேர்தல் மறுசீரமைப்பில் மக்கள் காங்கிரஸ் முன்னெடுத்து வரும் திட்டங்களை விளக்கிய அமைச்சர் ரிஷாட்  சிறுபான்மை மக்களுக்கு புதிய முறைமையினால் எத்தகைய பாதிப்புகளும் வரக்கூடதென்பதில் தமது கட்சி தெளிவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டுத்தலைவர்களிடம் இது தொடர்பில் தமது கட்சி சுட்டிக்காட்டியிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் சிறுகட்சிகளான ஜே வி பி, ஹெல உறுமய ஆகியவற்றுடனும் சிறுபான்மைச் சகோதரக் கட்சிகளுடனும் தாங்கள் பேச்சு நடாத்திவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற செயலாளர் நாயகம் சுபைர்தீன், சிறுபான்மை மக்களுக்கு உகந்த முறைகள் தொடர்பில் அங்கு பல விடயங்களை தெரிவித்தார்.