2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு – மத்திய அரசு திட்டவட்டம்

india central governt

 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 29-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். மார்ச் 16-ந் தேதி பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு முடிந்தது. 2-வது அமர்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. வரும் 13-ந் தேதி அது நிறைவு அடைகிறது.

பாராளுமன்றத்தில் நேற்று பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் நிறைவேறின.

வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துறைக்கான மந்திரி வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர், “2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தை நிறைவேற்றுவோம். இது சவாலானது. நகரமயமாதல் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கிறது” என கூறினார்.

மேலும் “அனைவருக்கும் வீடு திட்டத்தை 2022-ம் ஆண்டுக்குள் சாதித்தாக வேண்டும். இதற்கான திட்டங்களை மத்திய அரசுக்கு மாநில அரசுகள் விரைவாக அனுப்பி வைக்க வேண்டும். நிலங்களை மாநில அரசுகள் வழங்க வேண்டும். திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். நாங்கள் நிதியை வழங்குவோம். இந்த திட்டத்தில் மாநில அரசுகள் ஒரு மாற்றத்தை கூட செய்யவில்லை. வீட்டு வசதி திட்டங்கள் ஒதுக்கீட்டில் மாநிலங்கள் இடையே பாரபட்சம் காட்டப்படமாட்டாது” எனவும் குறிப்பிட்டார்.

மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நிதித்துறை ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்கா அறிமுகம் செய்த பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மசோதா, குரல் ஓட்டின் மூலம் நிறைவேறியது.

இதன்மூலம் 2016-17 நிதி ஆண்டு செலவினத்துக்காக தொகுப்பு நிதியில் இருந்து ரூ.66 லட்சத்து 7 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்துக்கொள்ள பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இதன்மூலம் பாராளுமன்ற பட்ஜெட் நடவடிக்கையின் 2-வது கட்டம் முடிவு பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நிதி மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் நடப்பு நிதி ஆண்டுக்கான வரித்திட்டங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் மீது விவாதம் நடைபெறும்.

ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு சென்றுள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, நாடு திரும்பியவுடன் நாளை (வியாழக்கிழமை) நிதி மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசுவார்.

அதன்பின்னர் மத்திய பட்ஜெட் நிறைவேறும்.

இந்த வாரத்துக்குள் பட்ஜெட் நடவடிக்கைகளை முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.