கூட்டு எதிர்க்கட்சியினர் குரங்குகளைப் போன்று கத்துகின்றனர் – சரத் பொன்சேகா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன் போது முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

‘போர் இடம்பெறாத காலத்தில் காவல்துறையினரின் பணிகளை இராணுவத்தினர் மேற்கொள்ளத் தேவையில்லை, எனவே மஹிந்த ராஜபக்ச என்ற நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினரின்; பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு அதில் திருப்தி அடைய வேண்டும்.’

‘இராணுவத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மஹிந்தவின் அருகாமையில் வைத்துக் கொண்டிருக்கும் கெப்டன் நெவில் போன்றவர்கள் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் பயிற்சி பெற்றுக்கொள்ளவில்லை.’

‘கோதபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் சர்ச்சை காணப்படுகின்றது. பயங்கரவாதிகள் ஒருபோதும் 25 மீற்றர் தொலைவில் வைத்து குண்டை வெடிக்கச் செய்திருக்க மாட்டார்கள்.’

‘குண்டு துளைக்காத வாகனம் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்த பயங்கரவாதிகள் முட்டாள்கள் அல்ல.’

‘இந்த குண்டுத் தாக்குதல் நிச்சயமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் தாமகேவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.’

‘போர் இடம்பெற்ற காலத்திலும் மஹிந்த ராஜபக்சவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை, அதனை புலனாய்வுத் தகவல்களின் மூலம் தெரிந்து கொண்டோம்.’

‘மஹிந்த ராஜபக்சவிற்கு இருந்த அச்சுறுத்தல் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பயங்கரவாதியுடன் இணைந்து தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தமையேயாகும்.’

‘போரை செய்த இராணுவத் தளபதிக்கு 15 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் இருக்க முடியுமாயின் போர் இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதற்கு எவ்வித சிக்கல்களும் இருக்காது.’

‘கூட்டு எதிர்க்கட்சியினர் குரங்குகளைப் போன்று கத்துகின்றனர். உண்மைகள் எதுவெனத் தெரிந்து கொள்ளாது இவ்வாறு கூச்சலிடுகின்றனர்’ என சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார்.