தமிழ் நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் : மோடி – சோனியா பிரசாரம்

Narendra-Modi-and-UPA-Chairperson-Sonia-Gandhi_Fotor

 

தமிழக சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் தொடங்கிவிட்டது.

ஓட்டுப்பதிவுக்கு சரியாக இன்னும் 15 நாட்களே உள்ளதால் கட்சித்தலைவர்கள் தொகுதிகளை முற்றுகையிட்டுள்ளனர். வேட்பாளர்கள் தெரு, தெருவாக சென்று ஆதரவு திரட்டி வரும் நிலையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முக்கிய நகரங்களுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் பிரசார களத்தை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் மேலிட தலைவர்கள் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முற்றுகையிட தயாராகி வருகிறார்கள். அவர்கள் பேசும் பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை தமிழக தலைவர்கள் ஆர்வமாக செய்து வருகிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தடவை எதிர்பார்த்த மெகா கூட்டணி அமையாததால் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனால்தான் பா.ஜ.க. தலைவர்கள் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டவில்லை. என்றாலும் தற்போதுதான் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழ்நாடு பக்கம் எட்டிப் பார்க்க தொடங்கியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6 மற்றும் 8–ந்தேதிகளில் 2 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். 6–ந்தேதி பாலக்காட்டில் இருந்து ஓசூருக்கு வரும் பிரதமர் மோடி அங்கு மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதன்பிறகு மோடி விமானம் மூலம் சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தி.நகரில் போட்டியிடும் எச்.ராஜா ஆகியோர் உள்பட பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசுவார்.

மீண்டும் 8–ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வர உள்ளார். அன்று பிற்பகல் அவர் நாகை அருகே உள்ள வேதாரண்யத்தில் பேச உள்ளார். பிறகு கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். மோடி சுற்றுப்பயணத்தில் கடைசி நேரத்தில் சில மாற்றம் செய்யப்படலாம்.

பிரதமர் மோடி போல பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவும் தமிழ்நாட்டில் வருகிற 4 மற்றும் 9–ந்தேதி களில் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். 4–ந்தேதி அவர் ஹெலிகாப்டர் மூலம் பட்டுக்கோட்டை, கன்னியாகுமரி, கடையநல்லூர் சென்று பிரசாரம் செய்கிறார். அன்றிரவு மதுரை அருகே மேனேந்தலில் நடக்கும் கூட்டத்தில் 28 வேட்பாளர்கள் ஆதரித்து பேசுகிறார்.

மீண்டும் 9–ந்தேதி அமித்ஷா தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அன்று ஹெலிகாப்டரில் சென்று பரமக்குடி, திருப்பூர், மேட்டுப்பாளையம் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். அன்றிரவு அவர் கோவையில் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

பிரதமர் மோடி, அமித்ஷா தவிர சுமார் 20 மத்திய மந்திரிகளும் தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.

பிரதமர் மோடியின் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தமிழகம் வர உள்ளார். ஆனால் சோனியாகாந்தி வருகிற 5–ந்தேதி ஒரே ஒரு நாள் மட்டுமே தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

5–ந்தேதி அவர் சென்னை தீவுத்திடலில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அந்த கூட்டத்தில் சோனியாவுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கலந்து கொண்டு பேச உள்ளார்.

சோனியா–கருணாநிதி இருவரும் ஒரே மேடையில் பேசுவதால் அது தேர்தல் களத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று தி.மு.க. – காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் வருகிற 7 மற்றும் 13–ந்தேதிகளில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். மோடி, அமித்ஷா, சோனியா போல அல்லாமல் ராகுல்காந்தி ரோடு–ஷோ நடத்தக்கூடும் என்பதால் ராகுலின் பிரசாரம் சூறாவளி சுற்றுப்பயண பிரசாரமாக அமையும் என்று கூறப்படுகிறது.

ராகுல்காந்தியை தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளுக்கு அழைத்து செல்வது என்ற சுற்றுப்பயண விவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ராகுல் பிரசார சுற்றுப்பயணத் திட்டத்துக்கு இறுதி படிவம் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் 7–ந்தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்று அவர் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

சென்னையில் பிரசாரத்தைத் தொடங்கும் ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களின் தொகுதிகளுக்கு சென்று ரோடு–ஷோ நடத்த ஆர்வமாக உள்ளார். அதற்கேற்ப அவர் பிரசார பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அவர் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நா.சே.ராஜேஷை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13–ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு வரும் ராகுல் தென்மாவட்டங்களில் ஆதரவு திரட்ட உள்ளார். மதுரை, குமரி மாவட்டங்களுக்கு அவர் நிச்சயம் செல்வார் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே சோனியாவும், கருணாநிதியும் 5–ந்தேதி தீவுத்திடல் கூட்டத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது போல மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரசார் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய தேர்தல்களில் பல தடவை தமிழ்நாட்டுக்கு பிரசாரம் செய்ய வந்துள்ள ராகுல்காந்தி, ஒரு இடத்தில் கூட தி.மு.க. தலைவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்ததில்லை.

அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ராகுலும், ஸ்டாலினும் ஒரே மேடையில் தோன்றினால் நன்றாக இருக்கும் என்று காங்கிரசார் கருதுகிறார்கள். மேலும் ராகுல்–ஸ்டாலினின் ஒருங்கிணைந்த பிரசாரம் கூட்டணிக்கு வலு சேர்ப்பதாகவும் இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் ராகுல்–ஸ்டாலின் இருவரும் எந்த நகரில் நடக்கும் பிரசாரத்தில் ஒரே மேடையில் ஏறுவார்கள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. அதுபற்றி இரு கட்சியினரும் பேசி வருகிறார்கள்.