உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன்பு கசிந்தது. அதுதான் ‘பனாமா பேப்பர்ஸ்’.
இந்த அம்பலப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. அந்த நாட்டில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதை நவாஸ் ஷெரீப் மறுத்தார். இருப்பினும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதன்பேரில் நீதி விசாரணை நடத்தப்படும் என நவாஸ் ஷெரீப் அறிவித்தார். மேலும் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றசாட்டுக்கு தானாக முன்வந்து விளக்கமளித்தார். தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பதவி விலக தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடைசியாக வந்த தகவலின் படி, நவாஸ் ஷெரீப்பின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்களின் விசாரணை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயரை பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இருந்து அந்த அமைப்பு நீக்கியது. மேலும் அவர் வரிஏய்ப்பு எதுவும் செய்யவில்லை என்று இணையதளத்தில் ஏற்றம் செய்யும் போது ஏற்பட்ட எடிட்டிங் கோளாறு தான் காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.