எஸ்.அஷ்ரப்கான்
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு முயற்சிக்கும் எதிர் கட்சித்தலைவர் ஆர் சம்பந்தனின் அண்மைக்கால சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்கு முகமாக உலமா கட்சி தலைமையில் பல சிங்கள கட்சிகள் ஒன்றிணைந்து சம்பந்தனின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இன்று சத்தியக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி கூறியதாவது,
வடக்கையும் கிழக்கையும் நீதி மன்றம் பிரித்திருககும் போது அவற்றை மீண்டும் இணைப்பதே எமது இலக்கு என சம்பந்தன் சொல்வது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். திரு. சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர் கட்சித்தலைவராக இருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்கு மட்டுமான எதிர் கட்சித்தலைவரல்ல, முழு நாட்டுக்குமான எதிர் கட்சித்தலைவராகும். ஆனாலும் அவர் எதிர் கட்சித்தலைவர் என்ற தனது கடமையை சரிவர செய்கிறாரா என்றால் அதனைக்காண முடியவில்லை.
இன்று மக்கள் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, போன்றவற்றுக்கு முகம் கொடுக்கிறார்கள். அதே போல் சுனாமி வீட்டுத்திட்டத்தை இன்னமும் வழங்காமை, மௌலவி ஆசிரிய நியமனம் இழுத்தடிப்பு, மதங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தியோர் கைது செய்யப்படாமை என பல பிரச்சினைகளை மக்கள் எதிர் நோக்குகின்றனர். இவை எதைப்பற்றியும் எதிர் கட்சி என்ற வகையில் மக்கள் சார்ந்து சம்பந்தன் பேசாமல் விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை முன்னெடுப்பதிலேயே கவனமாக செயற்படுகிறார்.
அத்துடன் கிளிநொச்சியிலும் அத்து மீறிச்செயற்பட்டுள்ளதன் மூலம் டயஸ் போராவின் நிகழ்ச்சி நிரலை கொண்டு செய்வதாக தெரிகிறது. ஆகவே அரசாங்கம் சம்பந்தன் விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
மேற்படி சத்தியாக்கிரகத்தில் நவ சிஹல உறுமய கட்சி சார்பில் அதன் தலைவர் சரத் மனமேந்திர, தேச விமுக்தி பெரமுன தலைவர் கம்மரென்சி தேரர், நக்சத் லங்கா மஹா சபா தலைவர் ஜயந்த கலதுங்க ஊனமுற்ற இராணுவத்தின் சார்பில் திரு. அஜித் உட்பட பல கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.