இவ்வருடத்துக்கான இலங்கையின் ஹஜ் கோட்டாவை 4000 ஆக அதிகரித்து வழங்குமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் சவூதி ஹஜ் அமைச்சர் பந்தர் பின் முஹம்மத் ஹம்ஸா அல் ஹஜ்ஜாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இலங்கைக்கு கோட்டா அதிகரிக்கப்படும் நம்பிக்கை இருப்பதாகவும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால்சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
இதேவேளை ஹஜ் கட்டணம் இவ்வருடத்தில் என்றுமில்லாத வகையில் வீழ்ச்சியடையும் எனவும் சில ஹஜ் முகவர்கள் 4 இலட்சம் ரூபா கட்டணத்தில் சகலவசதிகளையும் கொண்ட ஹஜ் பொதிமுறை யொன்றினை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் ஹஜ் கட்டணம் தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘ஹஜ் யாத்திரிகைக்கென தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணத்துக்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடமே வழங்கப்படுவதன் மூலம் சந்தையில் குறைந்த கட்டணத்தில் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஹஜ் கட்டணங்களில் வீழ்ச்சி ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இப்போதே சில ஹஜ் முகவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்கு ஹஜ் பயண ஏற்பாடுகளை சகல வசதிகளுடனும் வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள். இதனால் ஹஜ் யாத்திரிகர்களே பயனடையவுள்ளார்கள்.
புதிய ஹஜ் வழிமுறைகளின் கீழ் ஹஜ் யாத்திரிகர்கள் தான் விரும்பும் முகவர் நிலையங்களைத் தெரிவு செய்து கொண்டு குறைந்த கட்டணத்தில் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஹஜ் விவகாரம் நீதிமன்ற தீர்ப்புகளைப் பெற வேண்டிய நிலை உருவாகியிருந்தது. ஹஜ் விடயமாக எதிர்காலத்தில் நீதி மன்றத்தை நாடி நீதி பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படமாட்டாது.
இவ்வாறு வழக்குகள் மூலம் பிரச்சினைகள் தீர்த்துக் கொள்வதற்கு இடமளிக்காத வகையில் ஹஜ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த வருடம் இலங்கைக்கு முதலில் 2240 ஹஜ் கோட்டாவே வழங்கப்பட்டது.
அதன் பின்பு மேலும் 600 கோட்டா வழங்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த வருடம் இலங்கைக்கு கிடைத்த கோட்டா 2840 ஆகும். இவ்வருடம் இலங்கைக்கு 4000 கோட்டா வழங்குமாறும் கோரியிருக்கிறோம்.
இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்கு பயணிக்கும் விகிதம் வருடாந்தம் அதிகரித்து வருகிறது. இதனை சவுதி ஹஜ் அமைச்சரிடம் விளக்கியுள்ளோம். இவ்வருடம் எமக்கு 4000 ஹஜ் கோட்டா கிடைக்குமென்ற நம்பிக்கையுண்டு.
எனவே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள தீர்மானித்திருப்பவர்கள் தம்மை திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றுள்ளது.