பிரபலமான முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவரினால் அரசாங்கத்தின் தகவல் அறியும் சட்டமூலம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது…!!

பிரபலமான முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர், ஒரு பிரபல பத்திரிகைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக அறிய முடிகின்றது. தம்மையும் தமது கட்சியின் செயற்பாடுகளையும் விமர்சிக்கும் அரசியல் கட்டுரைகளை வெளியிட வேண்டாம் என்று அப் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஊடாக இவ் அழுத்தத்தை பிரயோகித்துள்ளதாக நம்பகமாக தெரியவருகின்றது. இதன்மூலம், அரசாங்கத்தின் தகவல் அறியும் சட்டமூலம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

Unknown

முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்ட பத்திரிகை ஒன்றுக்கும் மேலும் சில ஊடகங்களுக்கும் பலதரப்பட்ட வழிகளில் அழுத்தங்களை பிரயோகிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஆராய்;ந்து பார்த்த போதே இது உண்மை என தெரியவந்துள்ளது.

 

பிரபல தேசிய நாளிதழ் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட ஊடகவியலாளர் நடப்புவிவகார அரசியல் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இந்தக் கட்டுரைகள் பலதரப்பட்ட காரணங்களுக்காக் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. எமது இணையத்தளம் உள்ளிட்ட பல நவீன ஊடகங்கள் அதனை மீள்பிரசுரம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால்; கடந்த சில வாரங்களாக மேற்படி கட்டுரையை அப்பத்திரிகை வெளியிடவில்லை. தகவலறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்;களிடம் இவ்விடயம் பற்றி வினவியபோது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவர் அப்பத்திரிகையின் முகாமைத்துவ மேலதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தம்மை விமர்சித்து எழுதப்படும் கட்டுரையை பிரசுரிக்க வேண்டாமென அழுத்தம் கொடுத்துள்ளதாக அறியவருகின்றது.

 

அண்மைக்காலமாக தமது கட்சிக்குள் பிரச்சினைகளை சந்தித்திருக்கும் இத் தலைவரது செயற்பாடுகளை மேற்குறித்த தினசரிப் பத்திரிகையில் அந்த ஊடகவியலாளர் நியாயமான, நடுநிலையான அடிப்படையில் விமர்சித்து வந்தார். எல்லா அரசியல்வாதிகளையும் சமமாக பார்க்கும் போக்கு அக்கட்டுரையில் இருந்ததால் கணிசமானோர் அதனை வாசித்து வந்ததை நாமறிவோம். ஆனால், இவ்வாறான விமர்சனங்களை குறித்த அரசியல் கட்சி தலைவரது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கின்றது என்பதை அவரது உரையில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ‘கூலிக்கு எழுதும் ஊடகவியலாளர்கள்’ என்று குறிப்பிட்டதன் மூலம் தன்னிடம் பணியாற்றும் ஊடக பணியாளர்கள் உள்ளடங்கலாக எல்லா ஊடகவியலாளர்களையும் அவர் கேவலப்படுத்தியதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

இப்படியிருக்கையில் கருத்துக்கு கருத்தின் மூலம் பதிலளிக்க முடியாத வங்குரோத்தில், பத்திரிகை ஆசிரியர் அல்லது ஆசிரிய பீடத்தை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக முகாமைத்துவத்தை தொடர்பு கொண்டுள்ளார் அவ் அரசியல்வாதி. இதனால் ஒரு தேசிய பத்திரிகையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக எழுதிவருவதற்கு அளிக்கப்பட்டிருந்த ஒரு முழுப் பக்கத்தை, இன்று முஸ்லிம் கட்சி தலைவர் ஒருவரே கெடுத்துள்ளார். இதன் விளைவாக, முஸ்லிம்களின் அரசியல் மற்றுமுள்ள பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைகள் கடந்த சில வாரங்களாக வெளிவராது தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமாக தெரிகின்றது.
நேர்மையாக சிந்திக்கின்ற ஒரு அரசியல் கட்சியின் தலைவராயின், ஊடகங்களில் வெளியாகும் கட்டுரைகள், செய்திகளுக்கு பதில் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய முடியாமல் அழுத்தம் கொடுப்பது வங்குரோத்து அரசியலின் உச்சக்கட்டம் என அவதானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, அரசாங்கம் தகவலறியும் சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சிகளுக்கு எதிரான செயற்பாடு என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

ஒரு அரசியல்வாதி ஊடகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதும், ஊடக தர்மத்தை போதித்த ஒரு மூத்த பத்திரிகை அதற்கு பயப்படுவதும் ஏன் என ஊடகவியலாளர்கள், ஊடக சங்கங்கள், அவதானிகள், சமூக நலன் விரும்பிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.