சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது : வவுனியாவில் அமைச்சர் றிசாத்..

 

 

இலங்கை ஒரு சுயாதிபத்திய நாடு. சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி  நிரல்களுக்கு அமைய நாம் ஒரு போதும் செயற்பட முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016) தெரிவித்தார். 

13094304_583072915192091_4789074623550239921_n_Fotor

வவுனியா, சின்னப் புதுக்குளத்தில் அமைந்துள்ள, சமுர்த்தி வங்கி சங்கத்தில் இடம்பெற்ற, புத்தாண்டு விழாவில்  பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்

அமைச்சர் மேலும் கூறியதாவது,,,

இந்த நாடு குறிப்பாக வடக்கு, கிழக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு அவதிப்பட்டு, கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து மக்களின் பொருளாதாரம் சூரையாடப்பட்டது.

சுதந்திரத்தின் பின்னர் இந்த நாட்டில் பெரும்பான்மையான காலங்கள் வன்முறையிலேயே கழிந்தன. தற்போது நாம் நிம்மதியுடன் வாழ்க்கை நடத்துகின்றோம். இந்தப் புத்தாண்டு விழாவிலே, தமிழ், சிங்கள், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி, அனைவரும் கலந்துகொண்டுள்ளமை எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. இதுதான் உண்மையான சமாதானத்துக்கான அடித்தளம். இந்த அடித்தளத்திலிருந்து நாம், இந்த நாட்டிலே முழுமையான சமாதானம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டிய நிலைக்கு நாம் அடித்தளம் இடவேண்டும். எமது மக்களின் ஏழ்மையையும், வறுமையையும், துன்பங்களையும், கஷ்டத்தையும் பயன்படுத்தி இன்னும் சிலர் வயித்துப் பிழைப்பு நடத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. பிச்சைக்காரனின் புண் போன்று எமது பிரச்சினைகளைக் காட்டிக் காட்டி, இன்னும் இலாபம் அடையும் கூட்டத்தினருக்கு நாம் வழியமைத்துக்  கொடுக்கக் கூடாது.

புதிய அரசாங்கம் பொருளாதாரத் துறையில் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து, செயற்படுத்தி வருகின்றது. உலக வங்கி எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு 03 பில்லியன் ரூபா வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சியில் நாம் உரிய இலக்கை அடைவோம்.

வவுனியாவைப் பொறுத்த வரையில் மூன்று இனங்களும் சகோதரத்துவமாகவும், அன்பாகவும் வாழும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை தொடர வேண்டும். வவுனியாவில் வாழும் வீடில்லாத அனைவருக்கும் இன, மத பேதமின்றி வீடு வழங்கும் திட்டமொன்றை நாம் வெகுவிரைவில் நடைமுறைப்படுத்துவோம். அதன் மூலம் ஏழை மக்களின் இருப்பிட வசதிக்கு தீர்வு காண்போம் என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.

13076507_583073038525412_3660959444079902900_n_Fotor

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வி. ஜயதிலக, மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர்  எம்.எம். அமீன், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பதிகாரி முத்து முஹம்மத் ஆகியோரும் உரையாற்றினர்