துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றைத் திருப்பி ஒப்படைப்பதற்கான பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மே மாதம் 06ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பொதுமன்னிப்புக் காலத்தினுள் சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்காதவர்களைக் கைதுசெய்வதற்கும், ஆயுதங்களை தம்வசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மே மாதம் 6ஆம் திகதிக்குப் பின்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இவை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி,
‘யுத்தக் காலத்தில், சுமார் 900 துப்பாக்கிகள் காணாமல் போயிருந்தன. அவற்றில் 600க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் சரியான எண்ணிக்கையைக் கூறமுடியாது.
நாட்டின் சமாதான சூழலையும் பாதுகாப்பான சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்காக இந்தப் பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில், தம்மிடம் இருக்கும் துப்பாக்கிகளைத் திருப்பிக் கொடுப்போருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
சன்னத் துப்பாக்கி அல்லது அதற்குச் சமமான துப்பாக்கி (கல் கட்டஸ், கட்டுத் துவக்கு) 5ஆயிரம் ரூபாய், பிஸ்டல், ரிவோல்வர் 10 ஆயிரம் ரூபாய், ரி-56 ரக துப்பாக்கி 25 ஆயிரம் ரூபாய் என வழங்கப்படும்.
பொதுமன்னிப்புக் காலத்துக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால், அதனையடுத்து முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையில் கைதுசெய்யப்படுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
‘சட்டவிரோதத் துப்பாக்கிகளை, தமது பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையம், மாவட்டச் செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம் ஆகியவற்றில் கையளிக்க முடியும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அந்தக் காலக்கெடுவை தம்மால் நீடிக்க முடியாது என்றும் வர்த்தமானி ஊடாக பொதுமன்னிப்புக் காலம் வரையறுக்கப்பட்டுள்ளால் அதனை மீறுவது சட்டவிரோதமாகும். எனவே, குறித்த காலத்தில் ஆயுதங்களை ஒப்படைத்துவிடுங்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.