தேசியத்தலைவருக்கான போட்டியில் பலியாகும் சமூக ஒற்றுமை

rauff hakeem rishad


தேசியத்தலைமை என்பது மக்கள் கொடுக்கின்ற அங்கீகாரம் தவிர அச்சடித்து வெளியிடும் பிரசுரமல்ல. இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 1956ம் ஆண்டு முதல் சிங்களக் கட்சிகளுடாக பல தலைமைகள் உருவாகியது. குறிப்பாக மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் வரை முஸ்லிம்களின் தலைமைத்துவம் அல்லது அரசியல் தலைவர்கள் சிங்களக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தனர். 

ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமானது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம் சமூகம் மீதான அடிமைத்தன ஜனநாயகக் கதவுகள் உடைக்கப்பட்டன. தேசிய அரசியல் கட்சிகளை நம்பி வாழ்ந்த சமூகம் பரிணாமம் பெற்றது. அதன் விளைவாக முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி தேசிய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக 1994ம் ஆண்டு முதல் மாற்றமடைகிறது. 

இந்த மாற்றத்துடன்தான் இந்த சமூகத்தை வழிநடாத்திய மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தேசியத்தலைவருக்கான முழு அங்கீகாரத்தையும் பெற்றார். உண்மையில் ஒரு சிறுபான்மை சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் பங்காளிகளாக மாற்றிய தலைவனுக்கு கிடைத்த கிரீடம்தான் தேசியத் தலைவர் என்ற உயரிய அந்தஸ்து. 

ஆனால் துரதிஸ்டவசமாக இந்த “தேசியத்தலைவர்” என்ற சமூகமயமான அந்தஸ்து பலராலும் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.  மர்ஹூம் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் தலைமைத்துவப் போட்டி, பிரதேசவாதம் என முஸ்லிம் தலைமைகள் பிளவு கண்டது. 

குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் கட்டமைப்பு முஸ்லிம் தலைவர்களாலேயே  சுயநல அரசியலுக்காக சிதைக்கப்பட்டது.  முஸ்லிம் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள், அட்டூழியங்கள் மற்றும் பிரதேசவாதம் தலைதூக்கியது.  குறிப்பாக பிரதேசத்துக்குப் பிரதேசம் பதவி மோகம் கொண்ட குறுநில அரசியல்வாதிகளின் உருவாக்கம் எழுச்சி கண்டது. 

முஸ்லிம்களின் சமூக ஒற்றுமை முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிற்போக்குச் செயற்பாடுகளால் துண்டாடப்பட்டது. இந்த நிலையில்தான் SLMC தலைமைத்துவம் வரலாற்றில் விட்ட தவறுகள் மற்றும் கட்சிக் கட்டுக்கோப்புகள் இல்லாமை என்பன சமூகத்தினை மேலும் மேலும் பலவீனப்படுத்தியது. 

குறிப்பாக SLMC தனது தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் காட்டிய சாணக்கியம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவதில் தோல்வி கண்டது. 

பிரதேசத்தை மையப்படுத்திய முஸ்லிம் தலைவர்களும் கட்சிகளும் பிரதேசவாதம் என்ற நச்சுப் பாம்பை வளர்த்தது. அதனால் SLMC யின் தேசியத் தலைமைத்துவம் என்ற தாரக மந்திரம் கேள்விக்குறியானது. குறிப்பாக கடந்த தேர்தல் வரை வன்னி மாவட்டத்துக்குள் மையப்படுத்தி அரசியல் நடாத்திய ACMC கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் புதிய யுக்திகளைக் கையாண்டார். 

குறிப்பாக SLMC யின் கோட்டையான அம்பாறை மற்றும் திருகோணமலையிலும் SLMC யின் செறிவான ஆதரவு பெற்ற புத்தளம் மற்றும் கொழும்பிலும் கட்சியின் செயற்பாடுகளை றிசாத் விரிவுபடுத்தினார். 

அதாவுல்லாஹ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களைப் போல் இல்லாமல் றிசாத்தின் பரிணாம வளர்ச்சி SLMC தலைமைத்துவத்தை ஆட்டங்காணச் செய்தது. அதிலும் கடந்த தேர்தலில் ACMC கட்சிக்கான வாக்குகளும் கிடைத்த பாராளுமன்ற ஆசனங்களும் விசேடமாக அநுராதபுரத்தில் கிடைத்த வெற்றியும் “தேசியத்தலைவர்” இலட்சணைக்கு கேள்விக்குறியை உருவாக்கியது, 

மேலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சிங்களப் பேரினவாதம் மற்றும் ஊடகங்கள் மீதான றிசாத்தின் துணிச்சல் மிக்க செயற்பாடுகள் அவரை பிரதேச அரசியலில் இருந்த தேசிய மட்டத்திற்குள் உள்வாங்கியது. 

இந்த நிலையில் “தேசியத்தலைவர்” என்ற மர்ஹூம் அஷ்ரபின் தன்னிகரற்ற மகுடம் தனது தனித்துவத்தை இழந்துள்ளது. தேசியத் தலைவர் என்பது வெறுமனே கட்சித் தலைவரையோ கட்சிக்குரிய ஆசனங்களையோ வைத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை. கட்சித்தலைமைத்துவம் சமூகத்தின் மீதான செயற்பாடுகளை எந்தளவு பக்குவமாகவும், வெற்றிகரமாகவும் முன்னெடுக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். 

இன்று SLMC மற்றம் ACMC கட்சிகளுக்கிடையிலான தேசியத்தலைவருக்கான போட்டி ஆரோக்கியமற்ற ஒன்றாகவும், இருவருக்கும் பொருத்தமற்றதாகவுமே உள்ளது. இவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற பிரதேசங்களில் சமூக ஒற்றுமை சீர்குலைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் மீதான எத்தனையோ சவால்களை முறியடிக்கவேண்டியவர்கள் சிறுபிள்ளைத்தனமான வாதப்பிரதிவாதங்களில் காலத்தை வீணடிக்கின்றனர். 

மேலும் இருகட்சிகளும் எதிர்காலத்தில் கட்டுக் கோப்பு இழந்த நிலையில் துண்டாடப்படக்கூடிய நிலைமையில் உள்ளது. குறிப்பாக தலைமைத்துவத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ள இவர்களால் சமூகத்தைப் பாதுகாக்கும் ஆளுமையை எதிர்பார்க்க முடியாது. 

ஆகவே இரு தலைவர்களும் தேசியத்தலைவர் என்ற தகைமையை இழந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூக ஒற்றுமை கட்டமைப்பு சரிசெய்யப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை மற்றும் வாழ்வாதார நிலைமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தின் உண்மையான சேவகர்களாகவும் காவலர்களாகவும் மாற்றமடையும் போது உங்களுக்கான “தேசியத்தலைவர்” பதவி இயல்பாகவே கிடைக்கும். 

 

fowmy mohamed

பௌமி முகம்மட்