பனாமா அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு இலங்கை பணம் பாரியளவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தான் முன்பே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் வெளியாகியிருந்த அறிக்கையொன்றின் பிரகாரமே தான் இந்த விடயத்தை அவரிடம் கூறியதாக வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த விடயத்தை அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் கலந்துரையாடுமாறு தனக்கு பணிப்புரை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டின் பணம் பாரியளவில் வெளியில் சென்றமை உண்மையான விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
இதேவேளை, பனாமா அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ள இரகசிய தகவல்களின் பிரகாரம் இலங்கையர்களின் கறுப்பு பணம் 10 நாடுகளிலுள்ள நிதி நிறுவனங்களில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவின் வேர்ஜின் தீவு, பனாமா, பஹாமாஸ், சீசெல், கியூபா, செமோவா, பிரித்தானியா, அங்கோலா, கிட்டேடூ, ஹெங்கொங் ஆகிய நாடுகளிலேயே வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பனாமா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கறுப்பு பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் 47 இலங்கையர்களது பெயர்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம், இந்த ஆவணங்களை வேறு நாடுகளுக்கு வழங்க பனாமா நீதித்துறை அனுமதி வழங்கியுள்ளது.