அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் நேரத்தில் நானே நாட்டின் ஜனாதிபதி : மகிந்த

mahintha Maithripala_Sirise_3409801b_Fotor

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து தனது பாதுகாப்பு படையினருடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் நேரத்தில் தானே நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்ததாக முன்னாள் ஜனாபதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அப்போது கணடுபிடிக்க முடியாத காரணத்தினால், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், தனது பாதுகாப்பு உட்பட விடயங்களை தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு தேவையான வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் ஹெலிக்கொப்படரில் கிராமத்திற்கு செல்லவும் தான் சந்தர்ப்பத்தை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

தான் ஹெலிக்கப்டரில் செல்லும் போது தேர்தல் முடிவுகள் முற்றாக வெளியாகி இருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் தேர்தல் முடிவுகளை அறிவித்திருக்கவில்லை. 

வேட்பாளர் சிறிசேனவை கண்டுபிடிக்க முடியாது இருந்தது.

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விட்டு காலை ஆறு மணிக்கு நான் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினேன். 

அப்போது நானே நாட்டின் ஜனாதிபதி.

எனது பாதுகாப்பு படையினருடன் கொழும்பில் இருந்து வெளியேறும் போது நானே நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி.

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு பின்னர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன். 

இந்த குற்றச்சாட்டுக்கு பொலிஸ் மா அதிபர், முப்படை தளபதிகள் சாட்சியமளித்துள்ளனர். 

அப்படி நடந்திருந்தால், விசாரணை முடிவுகளை அறிவிக்க சொல்லுங்கள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு செல்லும் முன்னர் நாடாளுமன்றத்தில் அவரை சந்தித்து பேசும் போது, எனது பாதுகாப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பிரதமருடன் கலந்துரையாடினார்.

80ஆம் ஆண்டுகளில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத காலத்தில் எனக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் ஆலோசனைபடி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன எனக்கு இராணுவ பாதுகாப்பை வழங்கினார்.

அன்று முதல் அனைத்து அரசாங்கங்களும் அந்த இராணுவ பாதுகாப்பை நீக்காது தொடர்ந்தும் வழங்கி வந்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண குடா நாட்டில் 89 வீதம் வாக்களிக்கப்பட்டிருந்ததால், நான் தோல்வியடைவேன் என்று அறிந்து கொண்டேன்.

சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் இந்தளவுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்பியிருக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.