தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ராகுல்காந்தி 4 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம்!

rahul_gandhi25_Fotorதமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் சேலத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்னும் 2 நாட்களில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஊர், ஊராக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள போதிலும் அ.தி.மு.க-தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. அந்த இரு கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. மக்கள் நலக்கூட்டணி மற்றும் பா.ம.க.வினரும் தேர்தல் பிரசாரத்தில் மற்றவர்களுக்கு கடும் சவாலாக உள்ளனர்.

ஆனால் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் இன்னமும் தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக்கும் மக்களிடையே அதிக செல்வாக்கு இல்லாததால் இந்த கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை.

என்றாலும் டெல்லி தலைவர்களை அழைத்து வந்து, தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்த காங்கிரஸ், பா.ஜ.க. மாநில தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரசில் சோனியா, ராகுல் இருவரது வருகையையும் எதிர்பார்த்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் காத்திருக்கிறார்கள். சோனியா, ராகுல் இருவரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகளில் இளங்கோவன் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் வேட்பாளர் தேர்வுக்காக முகாமிட்டுள்ள அவர் இன்று தலைவர்கள் பிரசாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது சோனியா, ராகுலின் தமிழக பிரசார தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை தமிழ்நாட்டில் அதிக நாட்கள் பிரசாரம் செய்ய வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மொத்தம் 3 அல்லது 4 நாட்கள் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார். அடுத்த வார இறுதியில் அவர் தமிழகம் வர வாய்ப்புள்ளது. இல்லையெனில் மே மாதம் முதல் வாரம் அவர் வருவார்.

ராகுல் தினமும் ஏதாவது ஒரு ஊரில் பொதுக்கூட்டத்தில் பேசுவார். மற்றபடி அவர் முக்கிய வழித்தடங்களில் ‘ரோடு-ஷோ’ நடத்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார். ராகுல் நடத்தும் ரோடு-ஷோ பிரசாரம் காங்கிரசுக்கு மிகப் பெரும் எழுச்சியை பெற்றுக் கொடுக்கும் என்று காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தமிழ்நாட்டில் ஒரே ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்ய உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் அவர் ஒரே மேடையில் பேச திட்டமிட்டுள்ளார்.

இதற்கான பொதுக்கூட்டம் சென்னை அல்லது புறநகரில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. அனேகமாக மே மாதம் 5-ந் தேதி சோனியா-கருணாநிதி பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த தடவை கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூட்டணி அமைக்க முயன்றனர். துரதிஷ்டவசமாக அவர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. இதனால் பா.ஜ.க. 156 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

பா.ஜ.க. தலைமையில் பலமான மெகா கூட்டணி அமையும் பட்சத்தில் மத்திய மந்திரிகள் வரிசையாக தமிழ் நாட்டுக்கு அனுப்ப பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார். அதோடு ரத ஊர்வலங்கள் நடத்தி விறுவிறுப்பு ஏற்படுத்தவும் முடிவு செய்திருந்தனர்.

கூட்டணி அமையாத காரணத்தால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். எனவே அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகம் வர உள்ளார். அவர் ஒரே ஒருநாள் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில், கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவார் என்று தெரிகிறது.

எனவே அடுத்த வாரம் இறுதியில் இருந்து தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தை எதிர்பார்க்கலாம்.