சமஷ்டி என்ற எண்ணக்கருவும் கோரிக்கையும் தமிழ் மக்களின் கோரிக்கையென நாம் நம்பவில்லை. இது தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கையென்றே எண்ணுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரிவின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியென்ற ரீதியில் நாம் எதிர்பார்ப்பது தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் உட்பட, அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் சமஷ்டி என்பதை தேசிய ஒற்றுமைக்கான தீர்வாக நாம் ஒரு போதும் எண்ணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமஷ்டி மக்களை தூரப்படுத்துமே தவிர இனங்களை அண்மைப்படுத்தாது என்றும் தமிழ், முஸ்லிம், மலையகம் உட்பட அனைத்து சமூகங்களுடைய பிரச்சினைக்கு தீர்வென்பது பிரிந்து செல்வதால் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒற்றுமையைக் கொண்டுவருவதன் மூலமே அதை அடையமுடியும் என்று கூறிய அவர் தேசிய ஒற்றுமையை அடைய வேண்டுமானால் சம உரிமைகள் அனைத்து சமூகத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசனத்தின் வழி சம உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களாயினும் சரி சிங்கள மக்களாயினும் சரி அல்லது வடக்கு – தெற்கு மக்களாயினும் சரி ஒன்றிணைந்து பொதுப் பிரச்சினைகளுக்காக போராடத் தயாராகவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தமிழக மீனவர்கள் வடக்கு கடல் பரப்பில் உள்ள மீன் வளங்களை கொள்ளையடித்துச் செல்வதாகவும் இது ஒருபாரிய பிரச்சினை எனத் தெரிவித்த அவர் இது குறித்து அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. த.தே.கூ. எவ் வித குரலும் எழுப்புவதாகயில்லை என்றும் குறிப்பிட்டார்.
எல்லாப் பிரச்சினைகளையும் போராடியே வெல்ல முடியும் என்று கூறிய அவர் முதலாளித்துவ அரசியல்வாதிகளை மகிழ்ச்சிப் படுத்தும் ஏகாதிபத்தியத்தை மகிழ்ச்சிப்படுத்தும் பிரிவினைவாத சமஷ்டி முறை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாதகமானவொன்றாக தாம் கருதவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.