உங்கள் கட்சியில் தலைமை தாங்க ஹக்கீமை விடப் பொருத்தமானவர் ஒருவரும் இல்லையா?

rauff
போராளிகளே ! பலரும் கட்சியை உடைத்துக் கொண்டு போனார்கள் என்கிறீர்களே, அதைத்தான் நானும் சொல்கிறேன். தலைவர் அஷ்ர்ஃப் இருக்கும் போது ஏன் யாரும் கட்சியை உடைத்துக் கொண்டு செல்லவில்லை? அவரது ஆளுமை அப்படிப் பட்டது. ஹகீமிடம் அந்த ஆளுமை இல்லை என்பதை நீங்கள் மறுக்க முடியாது. எனது நஃப்சு கேட்கிறது எனக்கு தலைவர் பதவியைத் தாருங்கள் என்று அழுது கேட்டவருக்கு எப்படி இவர்கள் கட்டுப் படுவார்கள்? எப்படி மரியாதை கொடுப்பார்கள்? முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அதை முறையாக பாவிக்காது, வெறும் பணத்தை மட்டும் கேட்டுப் பெற்றதை, கூட இருந்து பார்த்தவர்கள் இவர்கள்.

 

 எப்படி இவரை மதிப்பார்கள், எப்படி இவரது தலைமைக்கு கட்டுப் படுவார்கள்? சாணக்கியத் தலைவர் பிரச்சினைகளை சாதுரியமாக கையாண்டார் என்கிறீர்கள். முஸ்லிம்களின் எந்த பிரச்சினையை சாதுரியமாக கையாண்டார் என்று சொல்ல முடியுமா? அவர் தலைவரானதிலிருந்து பெரும்பாலான காலத்தை அமைச்சராகவே கழித்தவர்.

 

 அமைச்சராக அவர் செய்த அபிவிருத்திகள் என்ன என்றாவது கூறமுடியுமா? கிழக்கு மக்களின் வாக்குப் பலத்தில், தான் அமைச்சராகி அந்த மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா? (அண்மையில் அட்டாளைச்சேனையில் / பாலமுனையில் சாப்பாடு போட்டதைத் தவிர) உங்கள் கட்சியில் தலைமை தாங்க ஹகீமை விடப் பொருத்தமானவர் ஒருவரும் இல்லையா? ஹை கொமாண்டில் உள்ள 90 பேரில் ஒருவர் கூடவா இதற்கு லாயக்கில்லை என்கிறீர்கள்? இலங்கையிலிருக்கும் இருபது லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்களில் ஒருவர் கூடவா அந்த தலைமை பதவிக்கு பொருத்தமில்லாதவர்.

 

 வேறு பொருத்த‌மானவர் இல்லாததால் இவரை சகித்துக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறுவது போல் உள்ளது. தனது கட்சியையும் தலைமைத்துவத்தையும் பாதுகாக்க போராளிகளை அழைக்கிறார்? மக்களெல்லாம் போராடி தலைவரை நலமாக வாழ வைப்பதல்ல போராட்டம் , தலைவர் போராடி மக்களை நலமாக வாழ வைக்க வேண்டும். அதுவே உண்மையான போராட்டம். இன்று இப்படியா நடக்கிறது? ஒரு சமுகம் அவர்களுடைய தலையெழுத்தை தாங்களாக மாற்றிக்கொள்ளாதவரை இறைவன் அவர்களது தலையெழுத்தை ஒரு போதும் மாற்ற மாட்டான்.

 

 இனிமேலாவது மாற்ற முயற்சியுங்கள்- போராளிகளே… விரைவில் ஒரு சக்தி வெளிப்படும் அது மு. கா வை அழிப்பதற்கோ, ஹகீமை இழிவு படுத்துவ‌தற்கோ அல்ல.

 

 ஹகீமை விடவும் நல்ல முறையில் தன்னலம் பாராது, தனது உச்ச பட்ச திறமைகளையும் மக்களின் அபிவிருத்திக்கும், மேம்பாட்டுக்கும் மட்டும் பயன் படுத்தும் ஒரு தலைமையாக இருக்கும். அந்த தலைமை வரும் போது சமுதாய நன்மையில் சிரத்தை மிக்க உங்களைப் போன்ற இளைஞர்கள் ஒற்றுமைப் படுவது அவசியம்.

 

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்