கருணைக் கொலைக்கு ஒப்புதல் வழங்கியது கனடா பாராளுமன்றம்

1_euthanasia_photo_Fotor

 

வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை (Euthanasia) என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரை திட்டமிட்டு முடிவடையச் செய்தல் ஆகும். நோயாளியின் விருப்பத்தின் பேரில், மருத்துவரின் உதவியுடன் தன்வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவதால் இதற்கு உதவி செய்யப்பட்ட தற்கொலை என்ற பெயருமுண்டு.

நோயாளியின் விருப்பத்தைப் பெற இயலாத நேரத்தில் (உயிரை பாதிக்கும் நோயுடன் பிறந்துள்ள குழந்தை, ஆண்டுக்கணக்கில் ஆழ்மயக்கத்தில் இருக்கும் நபர்) இதனை கருணைக் கொலை என்றும் கூறுவர்.

அவ்வகையில், கனடா நாட்டில் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மூப்புசார்ந்த பிரச்சனைகளால் படுத்த படுக்கையாக கிடப்பவர்களை கருணை அடிப்படையில் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்புதல் வழங்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவர் துணையுடன் தனது உயிரை கவுரவமான முறையில் போக்கிக் கொள்ள உதவும் இந்த சட்டம் வரும் ஜூன் மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சட்டம் கனடா நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும், வெளிநாட்டினருக்கு பொருந்தாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் இளம்வயது நபர்கள் இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் தேட முடியாது. இந்த சட்டத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் நபர்கள் 15 நாட்களுக்கு முன்னதாக இதற்கென உருவாக்கப்படும் குழுவிடம் மனுச் செய்ய வேண்டும். தங்களது விருப்பத்தை இதற்கு இடைப்பட்ட காலத்தில் திரும்பப் பெறும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

அநேகமாக, இந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என கருதப்படுகிறது.