தமிழகம் முழுவதும் 48 மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்

IndiaTv82dcc8_heat-final_Fotor

 

அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.

இதற்கிடை அடுத்த 48 மணி நேரத்தில் கடுமையான வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் அதிகபட்சமாக 37 செல்சியஸ் (98.6 டிகிரி) வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு 41 செல்சியஸ் (105.8 டிகிரி) வரை இது உயரக்கூடும்.

எனவே கடலோர மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம். பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். இந்த நேரங்களில் அதிக அளவில் களைப்பட வைக்கும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். குடிநீரை நன்கு பருக வேண்டும்.

காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதுடன் குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்வ வேண்டாம்.

தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்ல நேரிட்டால் கையில் குடிநீர் எடுத்துச் செல்வதுடன் தலை கழுத்துப் பகுதிகளை சிறிது ஈரமான துணியினால் முடிச் செல்லவும்.

டீ காபி போன்ற பானங்களை தவிர்த்து மோர், கஞ்சி, பழச்சாறுகள் அருந்த வேண்டும், ஆடு மாடுகளை நிழலான இடத்தில் வைத்து அவற்றிற்கு தேவையான அளவு குடிநீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்களுடன் அதிகளவில் பிரச்சாரத்திற்கு வர முடியாத நிலைஉள்ளது.

மாலை வெயிலின் தாக்கம் குறைந்த பின்னரே பொதுமக்களை சந்திக்கின்றனர். இது குறித்து வேட்பாளர்கள் கூறுகையில், பிரச்சாரத்திற்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் காஞ்சீபுரத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க இயலுமா என்று தெரியவில்லை.

பகலில் வாக்கு சேகரித்தாலும் சுட்டெரிக்கும் வெயிலால் பெண் தொண்டர்கள் அதிகளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை. எனவே குறைந்த அவகாசத்தில் எப்படி வாக்கு சேகரிக்க போகிறோம் என தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினர் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.

திருவள்ளூர், திருத்தணி, பழவேற்காடு, பூண்டி நீர்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் குறைந்து காணப்படுகிறது. பூண்டி நீர்தேக்கம், வீரா ராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில், பழவேற்காடு கடற்கரை உள்ளிட்டப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வெயிலின் தாக்கம் காரணமாக திடீர் சாலையோரக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இளநீர், தர்பூசணி, பனை நுங்கு ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இளநீர் ஒன்று ரூ. 35முதல் 50 ஆகவும், ஒரு நுங்கு ரூ. 2.50 ஆகவும் , தர்பூசணி கிலோ ரூ. 15 முதல் 20 ஆகவும் கிர்ணி பழம் ரூ20 முதல் 100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.