சக்கி இஸ்மாயில்
காங்கிரசின் உள்வீட்டிற்குள் என்ன நடந்தது, நடக்கின்றது என துலங்காமல் இருக்கும் சூழ்நிலையில் அக்கட்சியின் போராளிகள் பலரும் ஹசன் அலியை விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
ஹசன் அலி எனும் கதாபாத்திரம் சரியானதா பிழையானதா எனும் அலசலுக்கு முன், அவரை விமர்சிக்கும் மு.கா அரசியல்வாதிகளும், போராளிகளும் நியாயமாக விமர்சிக்கின்றார்களா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை எனலாம்.
மு.கா. வுக்கென்று முகவரி ஏதும் இல்லாத காலத்திலிருந்து பதவி ஆசைகளை முதன்மையாக கொள்ளாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு மூத்தவரைப் பார்த்து கேலி செய்கின்றவர்கள் யாரென்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மு. கா வுக்கு எதிராக அரசியல் செய்து, அது முடியாமல் போய், மு.கா வில் அரசியல் தஞ்சமடைந்த சூழ் நிலைக் கைதிகள், இன்றைய தலைவர் ஹக்கீமுக்கு எதிராக விபச்சாரப்பட்டம் கட்டியவர்கள்தான் இன்று அவருடன் சேர்ந்து அத்தனை அபச்சாரங்களையும் புரிந்து வருகின்றனர்.
எனவே மக்கள் ஹசன் அலி என்பவரை தராசில் எடைபோட முன்னதாக அவரைப்பற்றி இன்று பேசுபவர்களை தராசில் வைத்து எடைபார்க்க வேண்டியுள்ளது. சுருக்கமாயும், உருக்கமாயும் கூறுவதெனில் ஹசன் அலி கட்சியில் வாழ்கின்றவர் ஏனையவர்கள் கட்சியில் சேர்ந்தவர்கள் அல்லது கட்சியில் அவ்வப்போது சென்று ஒட்டிக்கொண்டவர்கள். இவ்வளவும் நிகழ்ந்த பின்பும் கட்சியில்தான் இருப்பேன் என்று ஹசன் அலி கூறுவதன் அர்த்தம் இதுதான். கூரை ஒழுகினாலும் சொந்த வீட்டில் வாழ்வது தனி சுகம். நீங்களெல்லாம் மரத்தின் கிளைகள். வேண்டாதபோது தறிக்கப்படுவீர்கள். இலையுதிர்காலத்தில் கிளைகளின் வனப்பு கெட்டுக்கிடக்கும். பறவைக்கூட்டமும் உறங்க வேறிடம் நாடியிருக்கும். ஹசன் அலி என்பது வேர். புயல் ஓய்ந்த பின்பும் அம்மரம் மீண்டும் கிளை பரப்பி நிமிர்ந்து நிற்க வேர் வேண்டும்.
நீங்கள் போற்றுகின்ற எம்.எச்.எம். அஷ்ரப் என்கின்ற மனிதன் விவசாயிகளின் தலைவன் (leader of Agriculture Society). அவனுக்கு உங்கள் (கிழக்கானின்) அபிலாசைகள் தெரியும், புரிந்தது. ஹசன் அலி என்ற மனிதனும் விவசாய சமூகத்திலிருந்து தோன்றி மரத்தின் பொந்திற்குள்ளேயே அடைகாத்து வந்தவர்.
ஆனாலும் உங்கள் தற்கால தலைவர் இருக்கிறாரே அவர் ஒரு வியாபாரி. வியாபாரிகளின் தலைவன் (leader of the business Society) அவருக்கென்று நிறைய கம்பனிகள் உண்டு. கார்னிவல் கரையுமட்டுமே சுவை தரும். கரைந்த பின்னர் உங்களுக்கெல்லாம் வெறும் சர்பத்துதான். அவருக்கு பின்னர் இருந்து சமிக்கை வழங்கும் அனைவரும் வியாபாரிகள். இதனால்தான் எப்போதும் உங்கள் தற்கால சாணக்கியனுக்கு உங்களின் அபிலாசைகள் ஒரு பொருட்டே கிடையாது. நீங்கள் அல்லலுற்றால்தான் தலைவரினதும், அவரின் ஆட்களதும் வியாபாரம் ஓகோவென்று நடக்கும்.
மதிமயக்கத்தில் புரையோடிக் கிடக்கும் போராளிகளே உங்களிடம் நான் கேட்கின்றேன்!!!
“நீங்கள் கூறுவது போன்று ஹசன் அலியின் பிரச்சினை தேசியப்பட்டியல் என்றால்,
அதனை உங்கள் சாணக்கியன் ஹசன் அலிக்கு வழங்க முடியாதென தீர்மானிப்பாராயின்”
வழங்க வேண்டிய நபருக்கு வழங்கிவிடச் சொல்லுங்களேன்.
பிரச்சினை முடிந்துவிடும் அல்லவா?
அதனை வைத்துக்கொண்டு ஏன் ஒரு நாடகம் அரங்கேற்றி மக்களை ஏமாற்றுகின்றீர்கள்.
விளங்கிக் கொள்ளுங்கள்!!! ஹசன் அலியின் பிரச்சினை தேசியப் பட்டியல் அல்ல. உங்கள் சாணக்கிய தலைவனின் பிரச்சினை வேறு.
எனவே உங்கள் தலைவன் சிறந்த வியாபாரி என்பதனால் பாபுஜீஷ் ஐஸ் கிறீமை உங்களுக்கு கார்னிவல் என காட்டி தருகின்றார். போராளிக் குஞ்சுகள் உங்களுக்கு எதுகெட்டாலும் ஐஸ்கிறீம் என்றால் சொல்லவா வேண்டும்???