பனாமாவில் பணம் பதுக்கியது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் பனாமா ஆவணங்கள் வெளியானது. அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தனது மகன் உசேன் நவாஸ்சுக்காக இரு வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதில் பணமுதலீடுகள் செய்தாக தகவல் வெளியானது.
இதை நவாஸ் செரீப்பின் மகன் உசேன் நவாஸ் ஒப்புக் கொண்டார். எனவே, நவாஸ் செரீப்பை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் என லாகூர் ஐகோர்ட்டில் கோகர் நவாஸ் சிந்து என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அதில், பனாமா ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி வெளிநாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டதை நவாஸ் செரீப்பின் மகன் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் காட்டிய சொத்துக் கணக்கில் அது குறித்து உண்மைகளை நவாஸ் செரீப் மறைத்து விட்டார்.
நிதி அமைச்சர் இஷாக்தல் அளித்துள்ள வாக்குமூலத்தில் “நவாஸ் செரீப் பணமோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது சொத்துக்களை நவாஸ் செரீப் மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தவறுகளை செய்த அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு அரசு சார்பில் சட்ட அதிகாரி வாதிட்டார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதி ஷாகித் வாகித் நிராகரித்தார். மேலும் கோகர் நவாஸ் சிந்துவின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்தார்.