தமிழ் மக்கள் பேரவையின் செயற் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார் என வெளிவந்துள்ள செய்தி தவறானது என பேரவையின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பை இறுதி செய்யும் முகமாக, யாழ். பொது நூலகத்தில், நேற்று முன்தினம் பேரவை கூடியது.
இதன்போது பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான 4பேர் கொண்ட நடவடிக்கைக் குழு, மேலும் 7பேரை உள்ளடக்கி 11 பேர் கொண்ட செயற்குழுவாக மாற்றப்பட்டது.
இந்தக் குழுவிலும் முதலமைச்சரை அங்கம் வகிக்குமாறு கோரப்பட்ட போது தனது வேலைப்பழு காரணமாக செயற்பாட்டுக் குழுவில் தற்போதைக்கு இணைய முடியாது எனக் கூறியதாகவும், தனக்காக வைத்திய கலாநிதி லக்ஸ்மனை நியமிக்குமாறு அவர் கோரியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்தச் செய்தியே பேரவையின் செயற்குழுவில் இருந்து முதலமைச்சர் விலகினார் என்ற மயக்கத்துடன் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.